Last Updated : 13 Nov, 2019 03:19 PM

 

Published : 13 Nov 2019 03:19 PM
Last Updated : 13 Nov 2019 03:19 PM

அதிமுக சாதனை விளக்க நடைபயணத்தால் மேலூர் சாலையில் போக்குவரத்து நெரிசல்: வழக்கறிஞர்கள், மாணவர்கள் கடும் அவதி

மதுரை

மதுரையில் அதிமுகவினர் நடத்திய சாதனை விளக்க நடைப் பயணத்தால் மேலூர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள், மாணவர்கள் கடும் அவதியடைந்தனர்.

மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவை தொகுதிகளிலும் அதிமுக அரசின் சாதனைகளை விளக்க ஜோதி நடைபயணம் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் இன்று (புதன்கிழமை) தொடங்கியது.

இப்பயணம் வேலம்மாள் மருத்துவக்கல்லூரி அருகே தொடங்கியது. பாண்டிகோவில் வழியாக மீனாட்சி மிஷன் சந்திப்பு வந்து உத்தங்குடி, உலகநேரி, உயர் நீதிமன்றம் வழியாக ஒத்தக்கடை சென்றது.

நடைப் பயணத்தில் பங்கேற்றவர்களுக்கு ரிங் ரோடு சந்திப்பில் நடு ரோட்டில் ஜெயலலிதா படம் அச்சிடப்பட்ட டி சர்ட் வழங்கப்பட்டது. இதனால் ரிங் ரோடு சந்திப்பில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ரிங் ரோடு சந்திப்பில் இருந்து ஒத்தக்கடை வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ரிங் ரோடு சந்திப்பில் இருந்து ஒத்தக்கடை வரையிலான இரு வழிப்பாதையில் ஒத்தக்கடையில் இருந்து ரிங் ரோடு சந்திப்பு வரையிலான சாலையில் இரு வழியில் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டது. ரிங் ரோடு சந்திப்பில் இருந்து ஒத்தக்கடை நோக்கி வாகனங்கள் செல்லும் சாலை நடை பயணம் செல்வோருக்காக ஒதுக்கப்பட்டது.

உயர் நீதிமன்றம் தொடங்கும் நேரத்தில் நடை பயணம் நடைபெற்றதால் மதுரை உட்பட 13 மாவட்டங்களில் இருந்து உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு வந்த அரசு வழக்கறிஞர்கள், வழக்கறிஞர்கள், ஊழியர்கள், போலீஸார் உரிய நேரத்தில் நீதிமன்றத்துக்கு செல்ல முடியாமல் தவித்தனர்.

இது குறித்து வழக்கறிஞர்கள் கூறுகையில், வேலம்மாள் மருத்துவமனையில் இருந்து தொடங்கிய நடைபயணத்தை பாண்டிகோவில் சந்திப்பில் இருந்து புறவழிச்சாலையில் திருப்பி விட்டு, விவசாய கல்லூரி அருகேயுள்ள காலியிடத்தில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடத்தியிருக்கலாம்.

அதை செய்யாமல் உயர் நீதிமன்ற அலுவல் தொடங்கும் நேரத்தில் உயர் நீதிமன்றம் செல்லும் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியதால் மாணவர்கள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x