Published : 13 Nov 2019 02:20 PM
Last Updated : 13 Nov 2019 02:20 PM

மதுரையில் 30 அடி உயர இரும்புத் தகடுகளால் மறைத்து ரகசியமாக ஜெயலலிதா சிலை அமைப்பு

மதுரை

மதுரை கே.கே.நகரில் உள்ள எம்ஜிஆர் சிலை சீரமைப்பு பணியில் எம்ஜிஆர் சிலைக்கு அருகில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிலையையும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

அதிமுகவின் முன்னாள் முதல்வர் மற்றும் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மறைவுக்குப்பின், சென்னையில் உள்ள அதிமுக தலைமை கட்சி அலுவலகத்தில் எம்ஜிஆர் சிலைக்கு அருகில் ஜெயலலிதா சிலையும் அமைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஜெயலலிதாவுக்கு சிலை அமைத்திட அதிமுகவினர் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், புதிதாக சிலைவைப்பதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதால் புதிதாக ஜெயலலிதா சிலை அமைப்பதிலும் சிக்கல் உள்ளது.

இருப்பினும், பொது இடங்களில் ஜெயலலிதா சிலை வைக்கும் முயற்சியில் அதிமுக அமைச்சர்கள் மற்றும் கட்சியினர் பல்வேறு வகையில் ஈடுபட்டுவருகின்றனர். அந்த வகையில், மதுரையில் பல்வேறு இடங்களில் சிலைவைக்க அதிமுகவினர் முயற்சித்தனர். அதற்கு போலீஸார் அனுமதி வழங்காததால் ஜெயலலிதா சிலை வைக்கப்படவில்லை.

இதனிடையே, மதுரை கேகே.நகரில் எம்ஜிஆர் சிலை, கடந்த 1999ம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவுறுத்தலின்படி சோழவந்தான் தொகுதி முன்னாள் எம்எல்ஏ ராஜாங்கத்தின் தீவிரமுயற்சியால் எம்ஜிஆர் சிலை நிறுவப்பட்டது. அச்சிலையை தற்போதுவரை அவர் பராமரித்துவருகிறார்.

கடந்த 3 மாதத்திற்குமுன்பு, மதுரை மாநகர அதிமுக சார்பில் திடீரென எம்ஜிஆர் சிலையை மறைத்து சுற்றிலும் 30 அடி உயரத்திற்கு இரும்புத் தகடுகள் அமைக்கப்பட்டன. ரவுண்டானா பகுதியில் அமைந்துள்ள 30 அடி உயர இரும்புத்தகடுகளால் நாலாபுறமும் எதிர்வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்து அபாயம் ஏற்பட்டது. உடனடியாக போக்குவரத்து போலீஸார் நியமிக்கப்பட்டும் போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்பட்டன.

இந்நிலையில், எம்ஜிஆர் சிலையைச் சுற்றி இரும்புத் தகடுகளால் மூடிமறைத்து நடக்கும் வேலைகள் மர்மமாகவே இருந்துவருகின்றன.

அதில், தற்போது எம்ஜிஆர் சிலைக்கு அருகில் ரகசியமாக ஜெயலலிதா சிலை அமைக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x