Published : 13 Nov 2019 12:45 PM
Last Updated : 13 Nov 2019 12:45 PM

உள்ளாட்சித் தேர்தலுக்கு ஆயத்தமாகும் அதிமுக: மதுரையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் சாதனை விளக்க நடை பயணம் தொடக்கம்

மதுரை

மதுரை மாவட்டத்திலுள்ள 10 சட்டப்பேரவை தொகுதிகளிலும் அதிமுக அரசின் சாதனைகளை விளக்க ஜோதி நடைபயணம் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் இன்று (புதன்கிழமை) தொடங்கியது.

உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடக்கவுள்ளது. இதில் வெற்றி பெற அதிமுக பல்வேறு வழிகளில் ஏற்பாடுகளை தொடங்கிவிட்டது. அதிமுக ஜெயலலிதா பேரவை சார்பில் மதுரை மாவட்டத்தில் தொடர் ஜோதி நடை பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது.

இதற்கான துவக்க விழா இன்று நடந்தது. இதில் அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார், எம்எல்ஏ. விவி.ராஜன் செல்லப்பா உட்பட 2000-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

நடை பயணத்தில் பங்கேற்க 1000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் குவிந்தனர். இவர்களுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பயிற்சி அளித்தார். இன்று காலையில் வேலம்மாள் மருத்துவக்கல்லூரி அருகிலிருந்து நடைபயணம் தொடங்கியது.

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமை ஏற்று நடைபயணத்தில் சென்றார். எம்எல்ஏ.க்கள், ஜெயலலிதா பேரவையின் முக்கிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். மதுரை பாண்டிகோயில், ஒத்தக்கடை வழியாக மேலூர் நோக்கி சென்றது.

தொடர்ந்து 5 நாட்கள் நடக்கும் இந்த பயணம் மதுரை மாவட்டத்திலுள்ள 10 சட்டப்பேரவை தொகுதிகளிலும் சுற்றி வருகிறது. பல இடங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.

அதிமுக அரசின் சாதனைகள் அடங்கிய பிரசுரங்களை விநியோகித்தபடி பயணத்தில் இடம் பெற்றுள்ள இளைஞர்கள் சென்றனர். 5 நாட்களும் தொடர்ந்து நடை பயணம் மேற்கொள்கின்றனர். இரவில் குறிப்பிட்ட இடங்களில் தங்கி, மறுநாள் பயணத்தை தொடரும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

-எஸ்.ஸ்ரீநிவாசகன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x