

அப்துல் கலாம் பெயரிலான விருது, இளைஞர்களை ஊக்குவிக்கும் என்று அந்த விருதை முதன்முதலாக பெற்றுள்ள ‘இஸ்ரோ’ விஞ்ஞானி என்.வளர்மதி தெரிவித்தார்.
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் நினைவாக அவரது பெயரில் விருது வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி, இந்த ஆண்டுக்கான அப்துல் கலாம் விருதை இஸ்ரோ திட்ட இயக்குநரான என்.வளர்மதிக்கு முதல்வர் ஜெயலலிதா நேற்று வழங்கினார்.
முதல்வரிடம் இருந்து விருது பெற்றவர்கள் கூறியதாவது:
என்.வளர்மதி (அப்துல் கலாம் விருது):
எனது சொந்த ஊர் அரியலூர். அங்குள்ள நிர்மலா மேல்நிலைப் பள்ளியில் படித்தேன். அண்ணா பல்கலையில் எம்.இ., முடித்தேன். இஸ்ரோவில், 2012-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட ‘ரேடார் இமேஜ் சாட்டிலைட்’ திட்ட இயக்குநராக பணியாற்றினேன். இது 24 மணி நேரமும் படம் எடுத்து அனுப்பக் கூடியது. இதனால் பலரும் பயன் பெற்றுள்ளனர்.
அப்துல் கலாம் பெயரில் விருது வழங்குவதன் மூலம் தமிழக அரசு இஸ்ரோவை பெருமைப்படுத்தியுள் ளது. இந்த விருது, இளைஞர்களை உற்சாகப்படுத்தும். பொதுச் சேவைக் காக இந்த விருது வழங்கப்படுவது பெருமை தரக்கூடியது. இந்த விருதை இஸ்ரோவுக்கு சமர்ப்பிக்கிறேன். விருதை வழங்கிய முதல்வருக்கும் தமிழக அரசுக்கும் மக்களுக்கும் நன்றி.
ஈரோடு ஜோதிமணி (கல்பனா சாவ்லா விருது):
எனது சொந்த ஊர் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கள்ளிப்பட்டி. என் தந்தையும் கணவரும் லாரி டிரைவர்கள். கணவர் எனக்கு லாரி ஓட்ட கற்றுக் கொடுத்தார். தற்போது ’டாரஸ்’ மற்றும் 10 சக்கரங்கள் கொண்ட சரக்கு லாரிகளை ஓட்டி வருகிறேன். ஈரோட்டில் இருந்து குஜராத்துக்கு 10 நாட்களுக்கு ஒருமுறை பின்னலாடை சரக்குகளை எடுத்துச் செல்வோம். கடந்த 6 ஆண்டுகளாக லாரி ஓட்டி வருகிறேன். எனக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கியதற்கு நன்றி.
திருவண்ணாமலை பி.மணிமாறன் (இளைஞர் விருது):
எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளேன். சேவை செய்வதில் ஈடுபாடு அதிகம். சாலையில் கிடக்கும் தொழு நோயாளிகளை அழைத்து வந்து அவர்கள் உடலில் உள்ள புண்களை சுத்தம் செய்து மருந்து போடுவது, அவர்கள் இறந்துவிட்டால் சொந்த செலவில் இறுதிச்சடங்கு செய்வது போன்ற பணிகளை செய்து வருகிறேன். இந்த விருதை வழங்கிய முதல்வருக்கு நன்றி.
விருதுநகர் டெனித் ஆதித்யா (இளைஞர் விருது):
கல்லூரியில் முதலாண்டு படித்து வருகிறேன். சமூக சேவையை அடிப்படையாக கொண்டு அமைப்பு ஒன்றை நடத்தி வருகிறேன். வாழை மட்டையை ஓராண்டு கெடாமல் வைத்திருக்கும் தொழில்நுட்பம் உள்ளிட்ட 17 கண்டுபிடிப்புகள் என்னுடைய சாதனை.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.