Published : 13 Nov 2019 12:32 PM
Last Updated : 13 Nov 2019 12:32 PM

மதுரையில் 14 பேருக்கு மட்டுமே டெங்கு காய்ச்சல்: மாவட்ட சுகாதார துறை துணை இயக்குநர்

மதுரை

மதுரையில் இன்றைய நிலவரப்பட்டி வெறும் 14 பேருக்கு மட்டுமே டெங்கு காய்ச்சல் இருப்பதாக மாவட்ட சுகாதார துறை துணை இயக்குநர் அர்ஜூன் குமார் கூறியுள்ளார்.

மதுரையில் நேற்றிரவு 7 வயது சிறுமி ஒருவர் மர்மக் காய்ச்சலுக்குப் பலியானார். இதனையொட்டி சிறுமி டெங்கு காய்ச்சலுக்குப் பலியானதாக தகவல்கள் பரவின.

இது குறித்து மாவட்ட சுகாதார துறை துணை இயக்குநர் அர்ஜூன் குமார் செய்தியாளர்களிடம், "மதுரையில் இன்றைய நிலவரப்பட்டி வெறும் 14 பேருக்கு மட்டுமே டெங்கு காய்ச்சல் இருக்கிறது. அவர்களில் 4 பேர் அரசு மருத்துவமனையிலும், 10 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மதுரையில் கடந்த ஜனவரி முதல் நவம்பர் வரையிலான 11 மாதங்களில் 128 பேர் டெங்கு காய்ச்சல் வந்து நீங்கியுள்ளது. இதுவரை உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை" எனக் கூறினார்.

ஆனால், சுகாதாரத்துறை அதிகாரிகள், ‘டெங்கு’, ‘மர்மக்’ காய்ச்சல்களை வராமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதில் அக்கறை காட்டாமல் அதை மூடிமறைப்பதிலே ஆர்வம் காட்டுவதாக மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

மதுரையை அச்சுறுத்தும் டெங்கு, வைரஸ் காய்ச்சல்கள்..

மதுரை மாவட்டத்தில் கடந்த காலங்களைப் போல், இந்த ஆண்டும் ‘டெங்கு’ காய்ச்சல் தீவிரமடைந்துள்ளது.

இதனால், மதுரை அரசு மருத்துவமனையில் வழக்கத்தைவிட காய்ச்சல் நோயாளிகள் வருகை அதிகரித்துள்ளது. கூட்டத்தை சமாளிக்க போலீஸார் பாதுகாப்புடன் மருந்து, மாத்திரைகள் விநியோகம் செய்யப்படுகின்றன.

தமிழகத்தில் மழைநீர் வடிகால் கட்டமைப்பு வசதிகளும், பாதாள சாக்கடை வசதிகளும் முழுமையாக இல்லாத கிராமங்கள் நிறைந்த நகரமாக மதுரை உள்ளது.

அதனாலேயே, இங்கு மிதமான மழை பெய்தால்கூட மழைநீர் தேங்கி வைரஸ் காய்ச்சல், டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு தொற்று நோய்கள் வேகமாக பரவுகிறது.

ஆண்டுதோறும் ‘டெங்கு’ காய்ச்சலையும், அதனால், ஏற்படும் உயிரிழப்புகளையும் மதுரை மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் கட்டுப்படுத்த முடியாமல் திணறுகிறது.

இந்நிலையில், கடந்த காலங்களைப் போல், தற்போதும் மதுரையில் ‘டெங்கு’ தீவிரமடைந்துள்ளது. மதுரை அரசு மருத்துவமனையில் ஒரு புறம் டெங்கு நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பினாலும் மறு புறம் நோயாளிகள் வந்து கொண்டுதான் இருக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x