Published : 07 Aug 2015 05:51 PM
Last Updated : 07 Aug 2015 05:51 PM

சசிபெருமாள் உடலுக்கு தலைவர்கள், பொதுமக்கள் இறுதி அஞ்சலி: சொந்த ஊரில் நல்லடக்கம்

சசிபெருமாள் உடல் அவரது சொந்த ஊரான இ.மேட்டுக்காட்டில் அவரது வீட்டுக்கு முன்பாகவே நல்லடக்கம் செய்யப்பட்டது. அதே இடத்தில் சசிபெருமாள் நினைவு மணி மண்டபம் கட்டப்படவுள்ளது.

முன்னதாக, அவரது உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்தை அடுத்த உண்ணாமலைக்கடையில் உள்ள டாஸ்மாக் கடையை மூடக் கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட காந்திய வாதி சசிபெருமாள் உயிரிழந்தார்.

அவரது உடல் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது. பூரண மதுவிலக்கை அமல்படுத்தினால் மட்டுமே உடலை வாங்குவோம் எனக் கூறி சசிபெருமாளின் குடும்பத்தினர் உடலை வாங்க மறுத்து, உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனர்.

வைகோ உள்ளிட்ட தலைவர்கள் சசிபெருமாளின் உடலை பெற்று அடக்கம் செய்யு மாறும், உண்ணாவிரதத்தை கைவிடும்படியும் கேட்டுக் கொண்டனர். இதைத் தொடர்ந்து சசிபெருமாளின் உடலைப் பெற அவரது குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர்.

இதையடுத்து நாகர்கோவிலில் இருந்து அவரது உடல், சேலத்தில் இருந்து முக்கிய வீதிகளில் ஊர்வலமாக அவரது சொந்த ஊரான இ.மேட்டுக்காட்டுக்கு கொண்டுவரப்பட்டது. வழிநெடுகிலும் சசிபெருமாள் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

சசிபெருமாளின் சொந்த ஊரான இ.மேட்டுக்காட்டில், அவரது வீட்டுக்கு முன்பாக சசிபெருமாள் உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

திமுக, மதிமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். சசிபெருமாள் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தனர்.

இறுதி அஞ்சலி செலுத்தும் இடத்துக்கு அருகில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் இரங்கல் உரை ஆற்றினர்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், ஏராளமான பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர், சசிபெருமாள் உடல் அவர் வீட்டுக்கு அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அதே இடத்தில் சசிபெருமாள் நினைவு மண்டபம் கட்டப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

சசிபெருமாளின் மூத்த மகன் விவேக் தனது தந்தைக்கு இறுதி சடங்கு செய்தார். இன்றோடு உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொண்டார். ஆனாலும், தமிழகத்தில் முழு மதுவிலக்கை வலியுறுத்தி தொடர்ந்து போராடுவோம் என்று விவேக் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x