

மதுரை
மதுரையில் மர்மக் காய்ச்சலுக்கு 7 வயது சிறுமி பலியானார்.
மதுரை வில்லாபுரம் பூ மார்க்கெட் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் - ராஜமீனா தம்பதியினர். இவர்களுக்கு 7 வயதில் தியாஷினி என்ற பெண் குழந்தை இருந்தார்.
தியாஷினி கீரைத்துறை பகுதியில் உள்ள அருப்புக்கோட்டை நாடார் பள்ளியில் பயின்று வந்தார்.
இந்த நிலையில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுமி நேற்று இரவு 11 மணியளவில் திடீர் மரணமடைந்துள்ளார்.
இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையை அச்சுறுத்தும் டெங்கு, வைரஸ் காய்ச்சல்கள்..
மதுரை மாவட்டத்தில் கடந்த காலங்களைப் போல், இந்த ஆண்டும் ‘டெங்கு’ காய்ச்சல் தீவிரமடைந்துள்ளது.
இதனால், மதுரை அரசு மருத்துவமனையில் வழக்கத்தைவிட காய்ச்சல் நோயாளிகள் வருகை அதிகரித்துள்ளது. கூட்டத்தை சமாளிக்க போலீஸார் பாதுகாப்புடன் மருந்து, மாத்திரைகள் விநியோகம் செய்யப்படுகின்றன.
தமிழகத்தில் மழைநீர் வடிகால் கட்டமைப்பு வசதிகளும், பாதாள சாக்கடை வசதிகளும் முழுமையாக இல்லாத கிராமங்கள் நிறைந்த நகரமாக மதுரை உள்ளது.
அதனாலேயே, இங்கு மிதமான மழை பெய்தால்கூட மழைநீர் தேங்கி வைரஸ் காய்ச்சல், டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு தொற்று நோய்கள் வேகமாக பரவுகிறது.
ஆண்டுதோறும் ‘டெங்கு’ காய்ச்சலையும், அதனால், ஏற்படும் உயிரிழப்புகளையும் மதுரை மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் கட்டுப்படுத்த முடியாமல் திணறுகிறது.
சுகாதாரத்துறை அதிகாரிகள், ‘டெங்கு’, ‘பன்றி’ காய்ச்சல்களை வராமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதில் அக்கறை காட்டாமல் அதை மூடிமறைப்பதிலே ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்நிலையில், கடந்த காலங்களைப் போல், தற்போதும் மதுரையில் ‘டெங்கு’ தீவிரமடைந்துள்ளது. மதுரை அரசு மருத்துவமனையில் ஒரு புறம் டெங்கு நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பினாலும் மறு புறம் நோயாளிகள் வந்து கொண்டுதான் இருக்கின்றனர். இதனால், எப்போதும் அங்கு15 பேர் டெங்கு காய்ச்சலுக்கு நிரந்தரமாக சிகிச்சை பெறும் சூழல் இருக்கிறது.
டெங்கு தவிர, 100-க்கும் மேற்பட்டோர் மற்ற வைரஸ் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுகின்றனர்.
இந்நிலையில், மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுமி பலியாகியுள்ளார்.