Published : 13 Nov 2019 09:18 AM
Last Updated : 13 Nov 2019 09:18 AM

தொழில் முதலீடுகளை வரவேற்கிறோம்: சிகாகோ நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓபிஎஸ் அழைப்பு

சென்னை

உலகின் அனைத்து பகுதிகளில்இருந்தும் தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை திறந்த மனதுடன்வரவேற்கிறோம் என்று சிகாகோவில் நடந்த கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

அமெரிக்காவுக்கு அரசுமுறைப்பயணமாகச் சென்றுள்ளதுணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். நேற்று காலை சிகாகோவில், நெபெர்வெல்லியில் மெட்ரோ பாலிடன் ஏசியா பேமிலி சர்வீசஸ் மையத்தின் சார்பில், மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் விழா நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்ற துணை முதல்வருக்கு ‘மகாத்மா காந்தி மெடலியன் ஆஃப் எக்சலன்ஸ்’ என்ற பதக்கம் வழங்கப்பட்டது.

தொடர்ந்து, சிகாகோவில் உள்ள இந்திய தூதரகத்தில் தமிழகத்தில் புதிய முதலீடுகள் செய்வதற்கான வாய்ப்புகள் குறித்த கலந்துரையாடல் நடந்தது. இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:இந்தியாவில் முன்னேறிய மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாகும்.

இந்திய பொருளாதாரத்தில் 2-வது பெரிய மாநிலம் தமிழகம் என்பதுடன், முதலீடுகள் செய்யஉகந்த மாநிலமாகவும் விளங்குகிறது. இந்தியாவின் புதிய கண்டுபிடிப்புகள் குறியீட்டில் தமிழகம் 2 வது இடத்தில் உள்ளது. கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 304 புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் 43 மில்லியன் டாலர் மதிப்பு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் ஆட்டோமொபைல் தலைநகராக விளங்கும் தமிழகத்தில் ஒரு நிமிடத்துக்கு 3 கார்கள், 30 விநாடிக்கு ஒரு இருசக்கர வாகனம், 90 விநாடிக்கு ஒரு டிரக் உற்பத்தி செய்யும் வலுவான உயர்தர உட்கட்டமைப்பு உள்ளது. மாறி வரும் சூழலுக்கு ஏற்ப மின்னணு வாகன உற்பத்திக்கும் பல்வேறு நடவடிக்கைகளைதமிழக அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது.

சமீபத்தில் ஹூண்டாய் நிறுவனத்தின் கோனா என்ற இந்தியாவின் முதல் மின்சார கார் சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆட்டோமொபைல் தொழில் சவால்கள் நிறைந்த பாதையில் நுழைவதால் உயர்ரக தொழில் நுட்பம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் தமிழகம் அதிக கவனம் செலுத்திவருகிறது.

இந்தியாவின் விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில் பிரிவு போன்றவற்றில் மிக அதிகமானஅளவில் திறமையான உழைப்பாளர்கள் தமிழகத்தில்தான் உள்ளனர். தொழில்நுட்பத்துறையில் தமிழகம் மேலும் வளர்ச்சியடைவதற்கான சாத்தியக் கூறுகள் நிறையவே இருக்கின்றன. சென்னைக்கு 14.8 டிபிபிஎஸ் அலைவரிசையுடன் வரும் 3-சப்மெரின் கேபிள், மாநிலத்தில் உள்ள மிகை மின்சாரம், உயர்ந்தரக மனிதவளம் ஆகியவை தகவல் பூங்கா மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அமைவதற்கு ஏற்ற இடமாக உள்ளது.

தமிழகம் தற்போது தொழில் வளர்ச்சியின் புதிய பொற்காலத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறது. தொழில் புரிவதற்கு அனைத்து உதவிகளையும் தமிழகம் செய்ய தயாராக உள்ளது. எனவே, தமிழகத்தின் வளர்ச்சிப் பாதையில் அனைவரும் இணைந்து பயணிக்க வேண்டும் என்று வரவேற்கிறேன். மாநிலத்தின் வளர்ச்சியுடன் ஒவ்வொருவரின் வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் தமிழகத்தில் வழி இருக்கிறது. உலகின் அனைத்து பகுதிகளில் இருந்தும்முதலீடுகளையும் தொழில்களையும் நாங்கள் திறந்த மனதுடன் வரவேற்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் சிகாகோ நகரின் இந்திய தூதரக அதிகாரி சுதாகர் தலேலா, தேனி மக்களவை எம்பி ஓ.பி. ரவீந்திரநாத் குமார், நிதித்துறை செயலர் எஸ்.கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x