

டி.செல்வகுமார்
செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தென்காசி ஆகிய 5 புதிய மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம் ரூ.150 கோடியில் கட்டப்பட உள்ளது. இதற்கு முதல்வர் பழனிசாமி விரைவில் அடிக்கல் நாட்டுகிறார்.
நிர்வாக வசதிக்காக காஞ்சிபுரம் மாவட்டத்தை பிரித்து செங்கல்பட்டு, விழுப்புரத்தை பிரித்துகள்ளக்குறிச்சி, திருநெல்வேலியை பிரித்து தென்காசி, வேலூரை பிரித்து திருப்பத்தூர்,ராணிப்பேட்டை என 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 5 புதிய மாவட்டங்களுக்கும் சிறப்பு அதிகாரிகளாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 5 மாவட்டங்களின் தாலுகாக்கள், எல்லை வரையறை உருவாக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. புதிய மாவட்டங்களில் பணிபுரிய விரும்பும் அலுவலர்கள் தங்களதுவிருப்ப மனுக்களை அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ளனர்.
இந்த நிலையில், புதிய மாவட்டங்களின் ஆட்சியர் அலுவலகத்துக்கு நிரந்தர கட்டிடங்கள் கட்டஇடம் தேர்வு செய்யும் பணி நிறைவடையும் நிலையில் இருப்பதாக வருவாய்த் துறை அதிகாரிகள் கூறினர். இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறியதாவது: 5 புதிய மாவட்டங்களிலும் ஆட்சியர் அலுவலகத்துக்கு நிரந்தரக் கட்டிடம் கட்டுவதற்காக தலா 25 ஏக்கர் நிலத்தை வருவாய்த் துறை தேர்வு செய்து, பொதுப்பணித் துறையிடம் ஒப்படைக்க உள்ளது. அதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம் கட்டுவதற்கான திட்ட மதிப்பீடு, வரைபடம் தயாரிக்கப்பட்டு, கட்டிடம் கட்ட டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கும்.
தமிழகத்தில் ஏற்கெனவே உள்ள 32 ஆட்சியர் அலுவலகங்களின் மாதிரி அடிப்படையில், புதிய ஆட்சியர் அலுவலகங்களுக்கான கட்டிட வரைபடம் தயாரிக்கும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. தலா ரூ.30 கோடி என 5 ஆட்சியர் அலுவலகங்களும் ரூ.150 கோடியில் கட்டி முடிக்கப்படும்.
அனைத்து அரசு அலுவலகங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த பெருந்திட்ட வளாகமாக ஆட்சியர் அலுவலக வளாகம் அதிகபட்சமாக 7 மாடிக் கட்டிடமாக கட்டப்படும். அந்த வளாகத்தில் ஆட்சியர், கோட்டாட்சியர், வட்டாட்சியர், பொதுப்பணித் துறை அலுவலர், சார் பதிவாளர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், வட்டாரப்போக்குவரத்து அலுவலர் ஆகியோரின் அலுவலகங்கள் மற்றும் ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், உயர் அலுவலர்களின் குடியிருப்புகள் ஆகியவை ஒரே இடத்தில் அமைந்திருக்கும். இடவசதிக்கேற்ப, தரைப் பகுதியிலோ, தரைக்கு அடியிலோ வாகனங்கள் நிறுத்தும் வசதி செய்து தரப்படும். புதிய ஆட்சியர் அலுவலகக் கட்டிடங்களுக்கு முதல்வர் பழனிசாமி விரைவில் அடிக்கல் நாட்ட உள்ளார். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.