6 புதிய மருத்துவ கல்லூரிகளின் பணிகளை தொடங்க தமிழக அரசு முதல்கட்டமாக ரூ.600 கோடி விடுவிப்பு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

தமிழகத்தில் அமையவுள்ள 6 புதிய மருத்துவக் கல்லூரிகளின் பணிகளை தொடங்குவதற்காக முதல்கட்டமாக ரூ.600 கோடியை விடுவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரி இல்லாத மாவட்டங்களான விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், நாமக்கல், திருப்பூர் மற்றும் நீலகிரி ஆகிய 6 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய அரசு கடந்த மாதம் அனுமதி வழங்கியது. தலா ரூ.325 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள 6 கல்லூரிகளுக்கு மத்திய அரசின் நிதியாக 1,170 கோடியை (தலா ரூ.195 கோடி) வழங்குகிறது. மீதமுள்ள ரூ.780 கோடியை (தலா ரூ.130 கோடி) தமிழக அரசு ஏற்கிறது.

புதிய கல்லூரிக்கு 100 எம்பிபிஎஸ் இடங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. தமிழகத்தில் அமைக்கப்படவுள்ள ஒவ்வொரு புதிய கல்லூரியும் 150 எம்பிபிஎஸ் இடங்களுடன் அமைய உள்ளதால் அதற்கான கட்டமைப்புகளை உருவாக்க தேவையான கூடுதல் செலவினங்களை தமிழக அரசு ஏற்றுக் கொள்கிறது.

கூடுதல் செலவினத்துடன் சேர்த்து ரூ.380 கோடியில் விருதுநகர் மாவட்டம் கூரைக்குண்டு கிராமத்திலும், ரூ.345 கோடியில் ராமநாதபுரம் மாவட்டம் பட்டினம் காத்தான் கிராமத்திலும், ரூ.327 கோடியில் திண்டுக்கல் மாவட்டம் அதியநத்தம் கிராமத்திலும், ரூ.338.76 கோடியில் நாமக்கல் மாவட்டம் சிலுவம்பட்டி கிராமத்திலும், ரூ.336.96 கோடியில் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிராமத்திலும், ரூ.447.32 கோடியில் நீலகிரி மாவட்டம் ஊட்டியிலும் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படுகின்றன.

இந்நிலையில், இந்த 6 புதிய கல்லூரிகளின் பணிகளை தொடங்க முதல்கட்டமாக தமிழக அரசு தனது பங்கில் இருந்து தலா ரூ.100 கோடி வீதம் மொத்தம் ரூ.600 கோடியை விடுவித்துள்ளது. இதற்கான அரசாணையை சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் நேற்று வெளியிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in