

சென்னை கோபாலபுரத்தைச் சேர்ந்தவர் ரவிகுமார். இவரது மகன் ரஷிக்காந்த். இவர்களை நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சிபிசிஐடி போலீஸார் தேடி வருகின்றனர். இருவரும் முன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
அதில், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பாக எங்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நீட் தேர்வு ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்தபோது புகைப்படத்தில் மாறுபாடு இருந்தது. அதிகாரிகளை அணுகியபோது ஹால்டிக்கெட்டில் திருத்தம் செய்வதற்கான காலக்கெடு முடிவடைந்து விட்டதால் தேர்வு எழுதுமாறு தெரிவித்தனர்.
ஆனால், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக எங்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போலீஸார் எங்கள் வீட்டில் சோதனை நடத்தினர். முன்ஜாமீன் கோரி மதுரைக் கிளையை அணுகுமாறு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். முன் ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து விசாரணையை நவ, 19-ம் தேதிக்கு தள்ளிவைத்து, அதுவரை மனுதாரர்களைக் கைது செய்யக் கூடாது என நீதிபதி உத்தரவிட்டார்.