

தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி, பெருவுடையாருக்கு நேற்று மாலை அன்னாபிஷேகம் நடைபெற்றது.
ஆண்டுதோறும் ஐப்பசி மாத பவுர்ணமி நாளில் சிவன் கோயில்களில் அன்னாபிஷேக விழா நடைபெறும். இந்த விழா தஞ்சாவூர் பெரிய கோயிலிலும் வெகுவிமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ஐப்பசி பவுர்ணமியையொட்டி, தஞ்சாவூர் பெரிய கோயிலில் நேற்று மாலை அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
இதற்காக பக்தர்கள் வழங்கிய 1,000 கிலோ அரிசியால் சமைக்கப்பட்ட சாதத்தைக் கொண்டு 13 அடி உயரமுடைய பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம் செய்யப்பட்டது. மேலும், 500 கிலோ எடை கொண்ட வெண்டைக்காய், புடலங்காய், கேரட், கத்திரிக்காய், முட்டைகோஸ், முள்ளங்கி, செளசெள, உருளைக்கிழங்கு, பீட்ருட், அவரைக்காய் உள்ளிட்ட காய்களாலும், ஆப்பிள், ஆரஞ்சு, அன்னாசி உள்ளிட்ட பழங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு, ஆராதனைகள் நடைபெற்றன.
பின்னர் மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பெருவுடையாரை வழிபட்டனர். இதையடுத்து, இரவில் அலங்காரம் கலைக்கப்பட்டு, அன்னாபிஷேகம் செய்யப்பட்ட சாதம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.