கொடிக் கம்பம் சாய்ந்ததால் விபத்து? - லாரியில் சிக்கி காயமடைந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை: விபத்தை ஏற்படுத்தியதாக லாரி ஓட்டுநர் கைது

கொடிக் கம்பம் சாய்ந்ததால் விபத்து? - லாரியில் சிக்கி காயமடைந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை: விபத்தை ஏற்படுத்தியதாக லாரி ஓட்டுநர் கைது
Updated on
2 min read

கோவையில் கொடிக் கம்பம் சாய்ந்ததால், பின்னால் வந்த லாரியில் சிக்கி படுகாயமடைந்த பெண்ணுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

கோவை சிங்காநல்லூரைச் சேர்ந்தவர் நாகநாதன் மகள் ராஜேஸ்வரி என்ற அனுராதா(30). நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில், கணக்காளராக பணியாற்றிவரும் இவர், கடந்த 11-ம் தேதி விமான நிலையத்தில் இருந்து நீலாம்பூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றபோது கோல்டுவின்ஸ் அருகே விபத்தில் சிக்கினார்.

பின்னால் வந்த லாரி ஏறியதில், ராஜேஸ்வரியின் கால்கள் நசுங்கின. மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த வரதராஜபுரத்தை சேர்ந்த விஜயானந்த்(34) என்பவரும் லாரி மோதியதில் காயமடைந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக விஜயானந்த் அளித்த புகாரின்பேரில், அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல், உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டுதல், காயம் ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ், லாரி ஓட்டுநரான விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த முருகன்(53) மீது, மாநகர கிழக்குப் பிரிவு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

கோல்டுவின்ஸ் ராஜலட்சுமி மஹாலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமண விழா நடந்தது. அதிமுக ஆதரவாளர் ஒருவரின் இல்ல திருமண விழா என்பதால் அப்பகுதியில் சில மீட்டர் தூரம் சாலையின் ஓரம் அதிமுக கொடிக் கம்பங்கள் நடப்பட்டிருந்தன. "வரிசையாக வைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பங்களில் ஒன்று திடீரென சாலையில் சாய்ந்ததால், அதிர்ச்சியடைந்த ராஜேஸ்வரி தனது வாகனத்தை பிரேக் போட்டு நிறுத்த முயன்றார். அப்போது வாகனம் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் பின்னால் வந்த லாரி மோதி அவரது கால்கள் நசுங்கின" என்று அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

ஆனால், காவல்துறையினர் இந்த தகவலை முழுமையாக மறுத்துள்ளனர். கொடிக்கம்பம் சாய்ந்ததால்தான் இந்த விபத்து ஏற்பட்டது என முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை.

கோவை மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் கூறும்போது, ‘‘திருமண நிகழ்ச்சிக்காக முறையாக அனுமதி வாங்கிதான் சாலையோரம் கொடிக் கம்பம் வைக்கப்பட்டுள்ளது. கொடிக் கம்பம் சாய்ந்ததால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுவதில் உண்மையில்லை. லாரி மோதிதான் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது’’ என்றார்.

ஐசியூவில் தீவிர சிகிச்சைராஜேஸ்வரியின் உறவினர் சிவன் கூறும்போது, ‘‘ராஜேஸ்வரிக்கு தனியார் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. நேற்று முன்தினம் 6 மணிநேரம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர், நேற்று சில மணி நேரம் 2-வது அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடைக்கு கீழே 2 கால்களும் நசுங்கியதால், ஐசியூவில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

நாகநாதன் - சித்ரா தம்பதியரின் ஒரே மகள் ராஜேஸ்வரி. திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து பெற்றோருடன் தனியாக வாடகை வீட்டில் வசித்துவருகிறார். ராஜேஸ்வரி, தனக்கு கிடைக்கும் ரூ.15 ஆயிரம் ஊதியத்தில் தான் பெற்றோரை கவனித்து, குடும்பத்தை நடத்தி வந்தார். அவரதுதாய் சித்ரா சமையல் வேலைக்கு அவ்வப்போது செல்வார்.

தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற நாகநாதன், வயோதிகம் காரணமாக வேலைக்குசெல்வதில்லை. ராஜேஸ்வரி விபத்தில் சிக்கியதால் அவரது பெற்றோர்மனவேதனை அடைந்துள்ளனர். ராஜேஸ்வரி வேலை பார்த்துவரும் நிறுவனத்தில் செய்திருந்தஇன்சூரன்ஸ் பாலிசியை பயன்படுத்தியும், வேறு வகைகளில் தொகை பெற்றும் சிகிச்சை அளித்து வருகிறோம். தற்போது வரை ரூ.4.50 லட்சம் செலவாகியுள்ளது. சிங்காநல்லூர் திமுக எம்எல்ஏ கார்த்திக் நலம் விசாரித்தார்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in