

தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற சக நண்பனை சாதூர்யமாக செயல்பட்டு காப்பாற்றிய பள்ளி மாணவனை மாவட்ட எஸ்.பி வருண்குமார் நேரில் அழைத்து பாராட்டினார்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேரையூர். இதையடுத்துள்ள உடையார்கூட்டம் கிராமத்தில் வசிப்பவர் வழிவிடுமுருகன் (48). இவரது மகன் வடிவேலன்(13), அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று (திங்கட்கிழமை) மாலை பள்ளி முடிந்தப்பின் வடிவேலன் சக நண்பர்களுடன் அங்குள்ள புளிய மரத்தின் அருகே விளையாடியுள்ளார்.
அப்போது அங்கு மரத்தில் அமர்ந்திருந்த வடிவேலனின் வகுப்புத் தோழரான மாணவர் ஒருவர் தனது தந்தை மறைந்த சோகத்தில் இருந்தவர் திடீரென தற்கொலை செய்துக்கொள்ள முடிவு செய்துள்ளார். உடனடியாக மரத்தில் துண்டை கட்டி தூக்கு மாட்டிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
விளையாடிக் கொண்டிருந்த மாணவர்கள் இதைப்பார்த்து அலறி அடித்து ஓடியுள்ளனர். ஆனால் வடிவேலன் மட்டும் துணிச்சலாக சக நண்பனை காப்பாற்றும் எண்ணத்தில் சமயோசிதமாக ஓடிச்சென்று மாணவன் கழுத்தில் துண்டு இறுகாவண்ணம் தூக்கி பிடித்துக்கொண்டார். மாணவனை தூக்கிப்பிடித்துக்கொண்டே, ஓடும் சக மாணவர்களை பார்த்து யாரையாவது அழைத்துவாருங்கள் அதுவரை நான் தாங்கிப்பிடித்துக் கொள்கிறேன் என கத்தியுள்ளார்.
ஓடிச்சென்ற மாணவர்கள் அக்கம் பக்கத்தினரை அழைத்துவந்து தூக்கில் தொங்கிய மாணவனை மீட்டனர். மீட்கப்பட்ட மாணவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, அபாயகட்டத்தை தாண்டினார். அவருக்கு சக மாணவர்கள், பெரியவர்கள் ஆறுதலும் தைரியமும் தெரிவித்தனர்.
தூக்கிட்ட சக நண்பனை துணிச்சலுடன், சமயோசிதமாக சிந்தித்து காப்பாற்றிய மாணவர் வடிவேலன் குறித்து கேள்விப்பட்ட ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார், மாணவரையும், அவரது பெற்றோரையும் தனது அலுவலகத்துக்கு அழைத்தார். பெற்றோருடன் வந்த மாணவர் வடிவேலனை பாராட்டி, புத்தகம் பரிசளித்தார்.
மாணவர் வடிவேலனின் செயலைப்பார்த்து கிராம மக்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மாணவர் வடிவேலன் பெயரை அரசு விருது பட்டியலுக்கு பரிந்துரைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.