Published : 12 Nov 2019 07:33 PM
Last Updated : 12 Nov 2019 07:33 PM

போன் செய்தால் போதும் ; டோர் டெலிவரி முறையில் கஞ்சா விற்பனை: கூட்டாளிகளுடன் சிக்கிய மென்பொறியாளர்

கைதான கமலக்கண்ணன், லிண்டன் டோனி , அரவிந்த்

சென்னை

செல்போன் மூலம் டோர் டெலிவரி முறையில் கஞ்சா விற்பனை செய்த ஐடி ஊழியர் கூட்டாளிகளுடன் போலீஸாரிடம் சிக்கினார்.

ஒரு காலத்தில் பொட்டலம் என்று அழைக்கப்பட்ட கஞ்சா, குடிசைப் பகுதிகளில் கைலி கட்டிய லோக்கல் ரவுடிகளால் விற்கப்பட்டு வந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக புகைக்கப்பட்ட கஞ்சா தற்போது பரவலாக ஏழை, பணக்காரன், படித்தவன், படிக்காதவன் என அனைவராலும் உபயோகிக்கப்படுகிறது.

இதனால் கஞ்சாவின் தேவை அதிகரித்து ஆந்திரா, கேரளா, தமிழ்நாட்டில் தேனி, திண்டுக்கல் என பல இடங்களிலிருந்து சென்னைக்கு சப்ளை ஆகிறது. கஞ்சா யார் யார் கைகளுக்கெல்லாம் போகிறதோ அவ்வளவு பேரும் சம்பாதிக்கின்றனர். மொத்த வியாபாரம், சில்லறை வியாபாரம், பொட்டல வியாபாரம் என செயின்போல் கஞ்சா விற்பனை நீள்கிறது.

சென்னையில் கஞ்சா வியாபாரத்தைத் தடுக்க போலீஸார் எடுக்கும் முயற்சிகளை விட கஞ்சா வியாபாரிகள் நவீனமாகி வருகிறார்கள். அதில் ஒருவகைதான் போன் செய்தால் போதும், வீடு தேடி வரும் டோர் டெலிவரி சிஸ்டம். கைலி கட்டி கஞ்சா விற்ற காலம் போய் கையில் செல்போனுடன் கஞ்சா விற்பனை செய்யும் வியாபாரிகள் பெருகிவிட்டனர்.

இவர்கள் பணி கஞ்சாவுக்காக அலையும் செல்வந்தர்கள், படித்தவர்கள். கவுரவம் பார்ப்பவர்களின் நிலை கருதி போன் செய்தால் இருக்கும் இடத்திற்கே வந்து கஞ்சாவைக் கொடுக்கும் டோர் டெலிவரி சேவை அளிப்பார்கள்.

இதுகுறித்து போலீஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் போலீஸார் சம்பந்தப்பட்ட எண்ணை அழைத்து கஞ்சா வேண்டும் எனக் கேட்டுள்ளனர். ஆனால் கஞ்சா விற்பவர்கள் வாங்குபவர்கள் இடையே ஒருவித சங்கேத மொழி பயன்படுத்தப்படுகிறது. அதைச் சொன்னால்தான் நம்புவார்கள், பேசுவார்கள். இல்லையென்றால் ராங் நம்பர் என்று சொல்லிவிடுவார்கள்.

இந்தத் தகவலை அறிந்த தெற்கு இணை ஆணையரின் தனிப்படை எஸ்.ஐ.பாலகிருஷ்ணன் போன் செய்து அந்த சங்கேத மொழியைச் சொல்ல மறுமுனையில் எத்தனை பொட்டலம் எனக் கேட்டுள்ளனர். 100 பொட்டலம் என எஸ்.ஐ. கூறவும் என்ன பார்ட்டியா எனக்கேட்டு 30,000 ரூபாய் ஆகும் எனக் கூறியுள்ளனர். போலீஸாரும் அடையாளம் மறைத்து, பணம் தருவதாக ஒப்புக்கொண்டபின் கோட்டூர்புரம் வந்துவிடுங்கள் எனக் கூறியுள்ளனர்.

அங்கு போனபோது இங்கு வேண்டாம். மத்திய கைலாஷுக்கு வாருங்கள் என கஞ்சா வியாபாரிகள் கூறியுள்ளனர். இரண்டு மணி நேர அலைச்சலுக்குப் பின் இரவு 9.45 மணி அளவில் அங்குபோனபோது, இங்கு நிலைமை சரியில்லை. சோழிங்கநல்லூர் வாருங்கள் என அங்கு வரச் சொல்லியுள்ளனர்.

அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் பெரிய பையைக் கொடுத்துவிட்டு 100 பொட்டலம் இருக்கு எனக்கூறி ரூ.30 ஆயிரத்தை வாங்கிக்கொண்டு வேகமாக அங்கிருந்து நகர்ந்தனர். பொட்டலத்தை வாங்கிய பின் அவர்களை அவர்கள் அறியாத வண்ணம் போலீஸார் பின் தொடர்ந்தனர்.

அவர்கள் வந்த வழியே திரும்பி அடையாறு நோக்கிச் சென்றுள்ளனர். தரமணி அருகே வந்தபோது தரமணி பிள்ளையார் கோயில் தெருவுக்குள் நுழைந்துள்ளனர். போலீஸாரும் பின் தொடர்ந்துபோய் அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தவுடன் அதிரடியாக உள்ளே நுழைந்துள்ளனர். உள்ளே ஒருவர் அமர்ந்து தரையில் கஞ்சாவைப் பரப்பி வைத்து அருகில் உள்ள எடைபோடும் மெஷின் மூலம் கணக்கிட்டு பொட்டலம் போட்டுக் கொண்டிருந்தார்.

3 பேரையும் கொத்தாக அள்ளிய போலீஸாரைப் பார்த்தவுடன் கஞ்சா விற்றவர்கள் அதிர்ந்து போயுள்ளனர். போலீஸாரின் கெடுபிடியை உணர்ந்து கஞ்சா விற்பவர்களில் ஒருவர், ''நான் டைடல் பார்க்கில் பிரபல நிறுவனத்தில் மென்பொறியாளர் சார்'' என்று கெஞ்சியுள்ளார். இன்னொருவர், ''சார். நான் ஐஐடி ரிசர்ச் சென்டர் ஊழியர்'' என்று கூறியுள்ளார்.

''கவுரவமானவர்கள் செய்யும் தொழிலா இது?’’ என்று போலீஸார் கேட்டபோது, ''சார் நாங்க கஞ்சா வாங்க கஷ்டப்படுவோம். வெட்கப்படுவோம். என் நண்பர்கள் சிலருக்கு நானே கஞ்சாவை மொத்தமாக வாங்கி பிரித்துக் கொடுப்பேன், அதையே வியாபாரமாக செய்தால் என்ன என்று யோசித்தோம். அப்படித்தான் சார் இந்த டோர் டெலிவரி ஐடியா வந்தது.

இதில் பெண் கஸ்டமர்களும் உண்டு, கஞ்சா புகைப்பவர்கள் பாவம் எங்க சார் போய் வாங்குவார்கள் அதற்காகத்தான் இந்தத் தொழிலை ஆரம்பித்தோம். லட்சக்கணக்கில் பணம் புரளுது'' என வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

அவர்களைக் கைது செய்த போலீஸார், தொடர்ந்து நடத்திய விசாரணையில் பல தகவல்கள் கிடைத்துள்ளன.

கைதானவர்கள் விவரம்

மடிப்பாக்கம் பாலையா கார்டன் தெருவைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன் (29). இவர் டைடல் பார்க்கில் மென்பொறியாளராக உள்ளார். தரமணி பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அரவிந்தன் (30). இவர் ஐஐடி ரிசர்ச் சென்டரில் பணியாற்றுகிறார். அபிராமபுரம் படவட்டம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் லிண்டன் டோனி(26). இவர் தண்ணீர் கேன் வியாபாரம் செய்து வருகிறார்.

இவர்கள் மொத்தமாக கஞ்சா விற்கும் ஆட்களிடம் கஞ்சாவை வாங்கி அரவிந்தன் வீட்டில் இறக்கிவிடுவார்கள். பின்னர் அரவிந்தன் அதை எடை போட்டு பொட்டலமாக்குவார். அதை கமலக்கண்ணனும், லிண்டன் டோனியும் சென்று விற்பனை செய்வார்கள். அவர்களிடமிருந்து 1,180 கிராம் கஞ்சா, எடை போடும் எந்திரம், ரொக்கப் பணம் உள்ளட்டவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

மொத்தமாக இவர்களுக்கு கஞ்சா விற்கும் கும்பல், இவர்களைப் போலவே இதே பாணியில் கஞ்சா விற்கும் கும்பல் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

கவுரவமான தொழிலில் இருக்கும் படித்த பட்டதாரிகளே கஞ்சா விற்பனை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஞ்ஞான வளர்ச்சியை தனதாக்கிக் கொள்ள நினைத்தவர்கள், சட்டவிரோதமான தொழிலைத் தேர்வு செய்தது தவறு என்பதை உணராமல் சிக்கிக்கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x