Published : 12 Nov 2019 01:22 PM
Last Updated : 12 Nov 2019 01:22 PM

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புக்கு முன்பே விருப்ப மனுக்கள் பெறப்படுவது ஏன்? - முதல்வர் பழனிசாமி பதில்

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புக்கு முன்பே விருப்ப மனுக்கள் பெறப்படுவது ஏன் என்பதற்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.

சேலம் ஓமலூரில் இன்று (நவ.12) முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புக்கு முன்பே விருப்ப மனுக்கள் பெறப்படுவது ஏன்?

தேர்தல் அறிவித்தவுடன் பணிகளை மேற்கொண்டால் கால அளவு குறைவாக இருக்கும். கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். விருப்ப மனு வாங்க வேண்டும். சட்டப்பேரவை, மக்களவைத் தொகுதிகள் குறைவாக இருக்கும். உள்ளாட்சித் தேர்தலில் தொகுதிகள் அதிகமாக இருக்கும். அவர்களின் மனுக்களைப் பரிசீலித்து வேட்பாளர்களை முடிவு செய்ய வேண்டும். அதற்குக் கால அவகாசம் வேண்டும். அதனால்தான் முன்கூட்டியே விருப்ப மனுக்களைப் பெறுகிறோம்.

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புக்கும் தமிழக அரசுக்கும் தொடர்பில்லை. தேர்தல் ஆணையம் தன்னாட்சி பெற்ற அமைப்பு. உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கென தேர்தல் அதிகாரிகளை நியமித்து அதனடிப்படையில் தேர்தலை அறிவிப்பார்கள்.

சுென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளதே?

ஏற்கெனவே வருவாய்த் துறை அமைச்சர் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். 'புல்புல்' புயலால் ஏற்பட்ட பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்டிருக்கிறது.

தலைவாசல் கால்நடைப் பூங்கா எப்போது திறக்கப்படும்?

விரைவாக முடிக்கப்படும். இது மிகப்பெரிய திட்டம். ரூ.1,000 கோடியில் நிறைவேற்றத் திட்டமிட்டிருக்கிறது. அங்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடைப் பூங்கா அமையவிருக்கிறது. அதுமட்டுமின்றி, கால்நடை மருத்துவக் கல்லூரி, கால்நடை ஆராய்ச்சி நிலையம் அமையவிருக்கிறது.

அதிமுக கொடிக்கம்பம் விழுந்து பெண் ஒருவருக்குக் கால்கள் முறிந்துள்ளதே?

இதுவரைக்கும் என்னுடைய கவனத்திற்கு இதுகுறித்த தகவல் வரவில்லை. அதுகுறித்துப் பார்க்கப்படும். கொடி நடக்கூடாது என எந்த அறிவிப்பும் இல்லை.

வாகனத் தணிக்கையின்போது போலீஸின் லத்தி பட்டு விழுந்ததில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளாரே?

அதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். நீதிமன்ற உத்தரவின்படி காவல்துறை செயல்படுகிறது. நீதிமன்றம் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கிறது. இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. பொதுமக்களும் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஹெல்மெட் தொடர்பான சோதனையின்போது காவல்துறையினருக்கு பொதுமக்கள் நின்று பதில் சொல்ல வேண்டும். இப்படிப்பட்ட சம்பவங்களில் இருதரப்பிலும் தவறு நடக்கிறது.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x