Published : 12 Nov 2019 02:10 PM
Last Updated : 12 Nov 2019 02:10 PM

சமூக நீதிக்கான குரல் அறிவாலயத்தில் இருந்து ஒலித்திருக்கிறது: ஸ்டாலினுக்கு திருமாவளவன் நேரில் பாராட்டு

சென்னை

சமூக நீதிக்கான குரல் அறிவாலயத்திலிருந்து மீண்டும் உரத்து ஒலித்திருப்பதாக, திமுக தலைவர் ஸ்டாலினுக்கு திருமாவளவன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

விசிக தலைவர் திருமாவளவன் இன்று (நவ.12) திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் நேரில் சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்புக்கு பின் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"திமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ள பல்வேறு தீர்மானங்கள் வரவேற்கும் வகையில் சிறப்புமிகு தீர்மானங்களாக அமைந்திருந்தன. மத்திய-மாநில அரசுகளுக்கு இடையிலான முரண்பாடுகள் பெருகிவரும் இந்தக் காலச் சூழலில், குறிப்பாக தேசத்தை ஒற்றைத் தன்மையை நோக்கி நகர்த்திக் கொண்டிருக்கின்றனர்.

ஒரே தேசம்; ஒரே கலாச்சாரம் என்ற முழக்கத்தின் அடிப்படையில் பன்மைத்துவத்தைச் சிதைக்கும் முயற்சியில் தற்போதைய மத்திய அரசு தீவிரமாக இயங்கி வரும் இத்தகைய சூழலில், திமுக ராஜமன்னார் குழு பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும். மாநில உரிமைகளைப் பாதுகாக்கிற வகையில் மத்திய அரசு செயல்பட வேண்டும் என்கிற வகையில் தீர்மானம் நிறைவேற்றியது வரவேற்கத்தகுந்தது.

பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று வேறு எந்த மாநிலத்திலும் எழாத கோரிக்கைகளை திமுக வலியுறுத்தியுள்ளது. வேறு எந்தக் கட்சியும் இந்தக் குரலை எழுப்பவில்லை. இந்நிலையில், திமுகவின் சார்பில் இட ஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும் எனக் கோரியிருப்பதன் மூலம், சமூக நீதியைப் பாதுகாக்க வேண்டும் என்கிற, அக்கறையை திமுக வெளிப்படுத்தியிருக்கிறது.

அனைத்தையும் தனியார் மயமாக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. அதன்மூலம் சமூக நீதியைக் குழிதோண்டி புதைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது. இந்நிலையில், சமூக நீதிக்கான குரல் அறிவாலயத்திலிருந்து மீண்டும் உரத்து ஒலிக்கிறது என்கிற வகையில், திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எமது வாழ்த்துகளைத் தெரிவித்தோம்.

தனியார் துறையில் இட ஒதுக்கீடு வேண்டும் என்ற தீர்மானத்தையும் திமுக பொதுக்குழு முன்மொழிந்திருக்கிறது. அத்தீர்மானத்தை விசிக வரவேற்றுப் பாராட்டுகிறது. அந்த வகையில் இந்தச் சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பாக அமைந்துள்ளது".

இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.

அப்போது, உள்ளாட்சித் தேர்தல் குறித்து பேசப்பட்டதா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "திமுக தலைமையிலான கூட்டணி கட்டுக்கோப்பாக இருக்கிறது. நல்லிணக்கத்துடன் இருக்கிறது. தொடர்ந்து இந்தக் கூட்டணி சட்டப்பேரவை பொதுத்தேர்தல் வரையிலும் வெற்றிகரமாகப் பயணிக்கும் என்பதில் எந்த ஐயமும், மாற்றுக்கருத்தும் இல்லை. உள்ளாட்சித் தேர்தலைக் கூட்டணியாகச் சந்திப்போம்" என திருமாவளவன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x