அதிமுக கொடிக்கம்பம் விழுந்து பெண் படுகாயம்: முத்தரசன் கண்டனம்

இரா.முத்தரசன்: கோப்புப்படம்
இரா.முத்தரசன்: கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை

அதிமுக கொடிக்கம்பம் விழுந்து விபத்து ஏற்பட்டதில் படுகாயம் அடைந்தவருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக இரா.முத்தரசன் இன்று (நவ.12) வெளியிட்ட அறிக்கையில், "கோவை சிந்தாநல்லூர் பகுதியைச் சேர்ந்த அனுராதா என்பவர் நேற்று காலை பணிக்குச் செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதிமுக விளம்பரக் கொடிக்கம்பம் ஒன்று சரிந்து விழுந்துள்ளது.

அதேநேரத்தில் அங்கு ஒரு லாரியும் வந்துள்ளது. இதையடுத்து அனுராதா மீது லாரி ஏறி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் அனுராதாவின் இரு கால்களும் முறிந்து படுகாயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஏற்கெனவே சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த இளம் பொறியாளர் சுபஸ்ரீ மீது அதிமுக பேனர் விழுந்ததில் அப்பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்ததை சுட்டிக்காட்டி உயர் நீதிமன்றம் எச்சரித்ததும், கண்டித்ததும் நாடறியும்.

இதுபோன்ற பேனர், விளம்பர கொடிக்கம்பங்களை வைக்கமாட்டோம் என உயர் நீதிமன்றத்தில் அதிமுக உறுதியளித்ததையும் அறிவோம். ஆனால் அடுத்தடுத்து விளம்பர மோகத்தால் ஆளும் கட்சியே நீதிமன்ற வழிகாட்டுதலை மீறுவது கண்டனத்திற்குரியது.

படுகாயம் அடைந்துள்ள அனுராதாவுக்கு உரிய உயர் சிகிச்சைகள் அளிக்க வேண்டும். அத்துடன் உரிய நிவாரணம் வழங்க வேண்டும்," என இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in