Published : 12 Nov 2019 11:02 AM
Last Updated : 12 Nov 2019 11:02 AM

வாகனத் தணிக்கையின்போது மூதாட்டி உயிரிழந்த சம்பவம்: ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்குக; இரா.முத்தரசன்

இரா.முத்தரசன்: கோப்புப்படம்

சென்னை

வாகனத் தணிக்கையின்போது லத்தி பட்டு கீழே விழுந்ததில் மூதாட்டி உயிரிழந்த சம்பவத்தில், அவரது குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக இரா.முத்தரசன் இன்று (நவ.12) வெளியிட்ட அறிக்கையில், "விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி வட்டம் உலகங்காத்தான் வடக்கு காட்டுகொட்டாய் பகுதியில் குடியிருக்கும் ஐயம்மாள் என்பவர் தனது மகன் செந்தில் குமாரோடு இருசக்கர வாகனத்தில் கள்ளக்குறிச்சி வந்துள்ளார்.

அப்போது அப்பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ள போலீஸார் வாகனத்தை நிறுத்தச் சொல்லி உள்ளனர். செந்தில் குமார் வாகனத்தை ஓரமாக நிறுத்த முயற்சித்தபோது போலீஸார் கொஞ்சமும் பொறுமையின்றி செந்தில் குமாரைத் தாக்கியுள்ளனர்.

இது பின்னால் அமர்ந்திருந்த ஐயம்மாள் தலையில் பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போலீஸாரின் இத்தகைய செயல் கடும் கண்டனத்திற்கு உரியது. உயரதிகாரிகள் இதில் தலையிட்டு அத்துமீறித் தாக்குதலில் ஈடுபட்ட போலீஸார் மீது உரிய சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும், அரசு உயிரிழந்த குடும்பத்தாருக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அத்துடன் இதுபோன்ற போலீஸார் அதிகார அத்துமீறலில் ஈடுபடாதவாறு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு செயற்குழு சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் கள்ளக்குறிச்சி உட்கோட்டத்தில் தொடர்ச்சியாக பல்வேறு சம்பவங்களில் குறிப்பாக இளம்பெண்களைத் துன்புறுத்திய சம்பவம் சின்னசேலம் நகரில் சிறுமலர் தனியார் மேல்நிலைப்பள்ளியில் மாணவியின் மரணம் நிகழ்ந்த சம்பவங்கள் என அனைத்திலும் உண்மை நிலைகளை வெளிக்கொணர வேண்டும்," என முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x