

அரியலூர்
அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் 100 மூட்டை அரிசியால் சாதம் சமைத்து நேற்று அன்னாபிஷேகம் நடைபெற்றது.
கங்கைகொண்டசோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோயில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி பவுர்ணமி தினத்தன்று சிவலிங்கத்துக்கு 100 மூட்டை அரிசியால் சாதம் சமைத்து அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.
லிங்கத்தின் மேல் சாத்தப்படும். ஒவ்வொரு சாதமும் லிங்கத்தின் தன்மையைப் பெறுவதாகக் கூறப்படுகிறது. இதனால், ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான சிவலிங்கத்தை தரிசிக்கும் புண்ணியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. காஞ்சி சங்கர மடத்தைச் சேர்ந்த பக்தர்கள், இந்து சமய அறநிலையத் துறையினர் மற்றும் அன்னாபிஷேக விழா கமிட்டியினர் கடந்த 33 ஆண்டுகளாக அன்னாபிஷேக விழாவை நடத்திவருகின்றனர்.
அன்னாபிஷேகத்தை முன்னிட்டு 100 மூட்டை அரிசியால் சாதம் சமைக்கும் பணி நேற்று காலை 9 மணிக்குத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து பிரகதீஸ்வரர் சிவலிங்கத்துக்கு அன்னம் மற்றும் பலவிதமான பலகாரங்களால் அலங்காரம் செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். சிவலிங்கத்துக்கு படைக்கப்பட்ட அன்னம் பிரசாதமாக வழங்கப்பட்டது. எஞ்சிய சாதம் நீர்நிலைகளில் உள்ள மீன்களுக்கும், பறவைகளுக்கும் உணவாக அளிக்கப்பட்டது.