புதிய பணியாளர்களை நியமிக்கும் பணி தொடக்கம்: ரயில்வே ஒப்பந்த ஊழியர்களின் பணி நியமனம் ரத்தாகிறது

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை

ரயில்வேயின் பல்வேறு பிரிவுகளில் நாடு முழுவதும் சுமார் 14 லட்சம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். இதில் பாதுகாப்பு பிரிவு உட்பட மொத்தம் 2.30 லட்சம் பணியிடங்கள் காலியாகவுள்ளன. இந்த இடங்களுக்கு புதிய பணியாளர்கள் நியமிக்கப்படும் வரை ஓய்வு பெற்ற ஊழியர்களைக் கொண்டு நிரப்பலாம் என்று ரயில்வே வாரியம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது.

அதன்படி, தெற்கு ரயில்வே, மத்திய ரயில்வே, வடக்கு, தென்மேற்கு, தெற்கு மத்திய ரயில்வே உட்பட 16 ரயில்வே மண்டலங்களிலும் ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டது. தனியார் ஒப்பந்த ஊழியர்களும் நியமிக்கப்பட்டனர். இந்த வகையில் கடந்த ஆண்டு 2 லட்சத்து 41 ஆயிரம் பேர் நியமிக்கப்பட்டனர்.

குறிப்பாக, இன்ஜினீயரிங் பிரிவு, போர்ட்டர்கள், பாயின்ட்ஸ் மேன்கள், மின்பாதையில் பணியாற்றும் கலாசிகள், உதவி ரயில் ஓட்டுநர்கள், கார்டுகள், மின்பிரிவு மற்றும் இயந்திரப் பிரிவுகளில் அதிக அளவில் ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு பணியில் இருந்தபோது கடைசியாகப் பெற்ற சம்பளத்தில் 50 சதவீதம் மாதச் சம்பளமாக வழங்கப்பட்டது.

இதற்கிடையே நிரந்த ஊழியர்களை நியமிக்கும் பணியை ரயில்வே வாரியம் மேற்கொண்டது. இந்நிலையில், ரயில்வே அமைச்சர் பியூஸ்கோயல் தலைமையில் ரயில்வே பொதுமேலாளர்கள் கூட்டம் டெல்லியில் சமீபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் புதிய ஊழியர்கள் நியமனம் மற்றும் ஏற்கெனவே தற்காலிகமாக பணியாற்றி வரும் ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான பணி நியமனத்தை ரத்து செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது.

இதுதொடர்பாக ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது: காலி இடங்களை நிரப்புவதற்கு ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்கள் தற்காலிகமாக பணியில் அமர்த்தப்பட்டனர். சில பிரிவுகளில் ஒப்பந்த ஊழியர்களும் நியமிக்கப்பட்டனர். ரயில்வேயில் புதிய பணியாளர்கள் நியமனங்களுக்கான தேர்வு முடிந்து, ஒரு லட்சம் பேருக்கு பணி வழங்கப்படவுள்ளது. இதனால், தற்காலிகமாக பணியாற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்களின் பணி நியமனங்களை படிப்படியாக ரத்து செய்யும் உத்தரவு விரைவில் வெளியாகும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in