Published : 12 Nov 2019 09:25 AM
Last Updated : 12 Nov 2019 09:25 AM

மலைப்பிரதேசங்கள் மற்றும் கிராமங்களுக்கு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட டாக்டர்கள் இடமாற்றம்: கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு அரசுக்கு மீண்டும் வலியுறுத்தல்

சென்னை

வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு டாக்டர்கள், மலைப்பிரதேசங்கள் மற்றும் கிராமங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே உறுதியளித்தபடி தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு தமிழக அரசை டாக்டர்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 25-ம் தேதி முதல் 31-ம் தேதிவரை அரசு டாக்டர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு விடுத்த வேண்டுகோளை ஏற்று கடந்த 1-ம் தேதி வேலைநிறுத்தப் போராட்டத்தை விலக்கிக் கொண்டு டாக்டர்கள் பணிக்குத் திரும்பினர். இதற்கிடையே, போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்களை பணியிட மாற்றம் செய்ய தமிழக அரசு முடிவுசெய்தது. அதன்படி, சிறப்பு டாக்டர்கள், உயர் சிறப்பு டாக்டர்கள் என 200-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

குறிப்பாக சென்னை, திருவள்ளூர், சேலம் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பணியாற்றி வந்தடாக்டர்கள் ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பிரதேசங்களுக்கும், கிராமங்களுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், மருத்துவக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் அரசு மருத்துவக் கல்லூரிமருத்துவமனைகளில் பணியாற்றிய டாக்டர்கள், மருத்துவம் மற்றும்ஊரக நலப்பணிகள் இயக்ககத்தின்கீழ் செயல்படும் மாவட்ட மற்றும் தாலுகா மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் ஏற்பட்டுள்ள காலி இடங்களில் வேறு டாக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பினர் கூறியதாவது:எங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகிறோம். ஒவ்வொரு முறையும் பேச்சுவார்த்தையின்போது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகவும், போராட்டங்களை வாபஸ் பெறுமாறும்சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கேட்டுக்கொள்வார்.

அதை நம்பி நாங்களும் போராட்டங்களை வாபஸ் பெற்றோம். 2 மாதங்களுக்கு முன்பு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டபோதுகூட, கோரிக்கைகளை கண்டிப்பாக 6 வாரத்தில் நிறைவேற்றுவதாக உறுதி அளித்து, கோரிக்கைகளை பரிசீலனை செய்ய ஐஏஎஸ் அதிகாரி செந்தில்ராஜ் என்பவரை நியமித்தார். நாங்களும் போராட்டத்தை வாபஸ் பெற்றோம். ஆனால், அமைச்சர் சொன்னபடி கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை.

அதனால், 6 வாரத்துக்கு பின்னர் மீண்டும் கடந்த மாதம் 25-ம் தேதி வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினோம். முதல்வர் மற்றும் அமைச்சரின் வேண்டுகோளை ஏற்று கடந்த 1-ம் தேதி போராட்டத்தை வாபஸ்பெற்றோம். ஆனால், இதுவரை கோரிக்கைகள் குறித்து பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுக்கவில்லை.

மாறாக போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்களை பழிவாங்கும் நோக்கில் மலைப்பிரதேசங்கள், கிராமங்களுக்கு அரசு பணியிட மாற்றம் செய்துள்ளது. இவைதவிர, துறைரீதியான நடவடிக்கை குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. முதல்வரும், அமைச்சரும் பழிவாங்கல் நடவடிக்கையை கைவிட்டு, உறுதி அளித்தபடி பேச்சுவார்த்தை நடத்தி எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வர வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x