Published : 12 Nov 2019 09:03 AM
Last Updated : 12 Nov 2019 09:03 AM

36 ஆண்டுகளுக்குப் பின்னர் சென்னை - யாழ்ப்பாணம் இடையே விமான சேவை தொடக்கம்: பயணிகளுடன் இலங்கை ஆளுநர் பயணம்

சென்னை

சென்னை - யாழ்ப்பாணம் இடையே பயணிகள் விமானச் சேவை மீண்டும் தொடங்கியது. இலங்கையின் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் பயணிகளுடன் பயணம் செய்தார்.

இலங்கையில் நடந்த உள்நாட்டு போரால், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள பலாலிக்கு விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. இதையடுத்து 36 ஆண்டுகளுக்கு பின்னர் புனரமைக்கப்பட்ட பலாலி விமான நிலையம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமாக பெயர் மாற்றப்பட்டு கடந்த மாதம் 17-ம் தேதி இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது. அன்றைய தினம் சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் விமான நிலையத்துக்கு சிறப்பு சோதனை ஓட்டமாக விமானம் இயக்கப்பட்டது. இந்த விமானத்தை அலையன்ஸ் ஏர் நிறுவனம் இயக்கியது.

இந்நிலையில், சென்னை - யாழ்ப்பாணம் இடையே பயணிகள் விமானச் சேவையை நவம்பர் 11-ம் தேதி தொடங்கவுள்ளதாக கடந்த வாரம் அலையன்ஸ் ஏர் நிறுவனம் அறிவித்தது. அதன்படி, சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு விமானச் சேவை நேற்று தொடங்கியது. முதல் விமானம் 12 பயணிகளுடன் சென்னையில் இருந்து காலை 10.35 மணிக்கு புறப்பட்டது. பகல் 12 மணிக்கு விமானம் யாழ்ப்பாணம் சென்றது.

இதேபோல், யாழ்ப்பாணத்தில் இருந்து 35 பயணிகளுடன் பகல் 12.45 மணிக்கு புறப்பட்ட விமானம் பிற்பகல் 2.10 மணிக்கு சென்னை வந்தடைந்தது. யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணிகளுடன் இலங்கையின் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் பயணித்தார்.

சென்னை - யாழ்ப்பாணம் கட்டணமாக ரூ.3,990 மற்றும் வரிகள், மறுமார்க்கமாக யாழ்ப்பாணம் - சென்னை கட்டணம் ரூ.3,190 மற்றும் வரிகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திங்கள், புதன் மற்றும் சனிக்கிழமைகளில் மட்டும் விமானங்கள் இயக்கப்பட உள்ளன.

கடந்த 36 ஆண்டுகளுக்கு பின்னர் யாழ்ப்பாணம் விமான நிலையம் திறக்கப்பட்டு விமான சேவை தொடங்கியிருப்பது தமிழர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் இந்த விமான சேவையை வாரத்தில் 7 நாட்களும் விரிவுப்படுத்த அலையன்ஸ் ஏர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x