

சென்னை
தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ந.புவியரசன் கூறியதாவது:
தமிழக கடலோரப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏதும் இல்லை. அதனால், சில தினங்களுக்கு தமிழகத்தில் மழை குறைவாகவே இருக்கும்.
அடுத்த இரு நாட்களுக்கு தமிழகத்தில் கோவை, நீலகிரி, சேலம், ஈரோடு, தருமபுரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய 12 மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், இதர உள் மாவட்டங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் 6 செ.மீ. மழை பெய்துள்ளது. ராசிபுரத்தில் 5 செ.மீ., வால்பாறையில் 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என்றார்.