Published : 12 Nov 2019 08:18 am

Updated : 12 Nov 2019 08:19 am

 

Published : 12 Nov 2019 08:18 AM
Last Updated : 12 Nov 2019 08:19 AM

தலைமறைவான நாட்களில் தங்கியது எங்கே? - நீதிமன்றத்தில் முகிலன் பரபரப்பு தகவல்

mugilan-statement
கோப்புப்படம்

கி.மகாராஜன்

மதுரை


தலைமறைவான நாட்களில் தங்கியிருந்தது எங்கே என்பது தொடர்பாக முகிலன் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன், பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றக் கிளையில் அவர் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, பிப். 15-ம் தேதி முதல் ஜூலை 6-ம் தேதி வரை தலைமறைவாக இருந்தபோது எங்கு இருந்தீர்கள்? என்பதைத் தெரிவித்தால் ஜாமீன் வழங்க பரிசீலிப்பதாக முகிலனிடம் நீதிபதி தெரிவித்தார். இதனிடையே முகிலனுக்கு ஜாமீன் வழங்க ஆட்சேபித்து, அவர் மீது பாலியல் புகார் அளித்த பெண் தனியாக மனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில் முகிலனின் ஜாமீன் மனு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது முகிலன் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்தொடர்பாக சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் 15.2.2019-ல் ஒரு வீடியோவை வெளியிட்டேன். பின்னர், மடிப்பாக்கத்தில் உமர் ஓட்டலில் சாப்பிட்டு விட்டு எழும்பூர் ரயில் நிலையம் சென்றேன். அங்கு நான் மதுரை செல்லவும், நண்பர் பொன்னரசு கரூர் செல்லவும் பயணச் சீட்டு வாங்கினோம்.

நான் மதுரை செல்லும் ரயிலில் முன்பதிவு இல்லாத பெட்டியில் ஏறினேன். ரயில் செங்கல்பட்டு வரும்வரை அலைபேசியில் முகநூல்பார்த்தேன். பின்னர் தூங்கிவிட்டேன். கண் விழித்து பார்த்தபோது என் கண்களில் துணி கட்டப்பட்டிருந்தது. காரில் போய் கொண்டிருந்தேன். என்னுடன் இருவர் இருந்தனர்.

அவர்களிடம் நீங்கள் யார், என்னை எங்கு அழைத்துச் செல்கிறீர்கள், எனக்கேட்டேன். அவர்கள் என்னைக் கடுமையாகத் தாக்கினர். அப்போதுதான் நான் கடத்தப்பட்டிருப்பதை உணர்ந்தேன். அவர்கள் பேசிய மொழி எனக்குப் புரியவில்லை. பின்னர், என்னை ஒரு கட்டிடத்தின் மாடிக்கு அழைத்துச் சென்று அங்கிருந்த இருட்டு அறையில் அடைத்தனர். தினமும் இரு வேளை மட்டும் உணவு தந்தனர். அப்போது மட்டும் கதவைத் திறந்தனர்.

அந்த அறைக்குள் வைத்து, என்னிடம் சிலர் வேறு எந்தப்பிரச்சினைக்காகவும் போராடுங்கள், ஆனால், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தக்கூடாது. மீறி போராடினால் குடும்பத்தையே காலி செய்துவிடுவோம் என மிரட்டினர். அவர்களின் பிடியிலிருந்து தப்பிக்க முயன்றேன். அதைக் கண்டுபிடித்து என்னைக் கடுமையாகத் தாக்கினர்.

இதனால் எனது கண்களில் காயம் ஏற்பட்டது. பின்னர் கட்டாயப்படுத்தி தொடர்ந்து எனக்குப் போதை ஊசி போட்டனர். இதனால் எனது மனநிலை பாதிக்கப்பட்டு நினைவிழந்த நிலைக்கு தள்ளப்பட்டேன். பின்னர், லாரி ஒன்றில் ஏற்றி ஒரு கிராமத்தில் இறக்கிவிட்டனர். அங்கு ஒரு மரத்தடியில் மயங்கிய நிலையில் நீண்ட நேரம் கிடந்தேன். அங்கிருந்த நாடோடிக் குழுவினர் என்னை மீட்டு சில மருந்துகளை அளித்தனர். 2 மாதம் நான் அவர்களுடன் இருந்தேன். பின்னர், நான் ஜார்க்கண்டில் இருப்பதைத் தெரிந்து கொண்டேன்.

அடுத்து அவர்கள் பிகார் செல்லத் திட்டமிட்டிருந்ததை தெரிந்து கொண்டேன். பின்னர் ஆந்திரா வழியாகச் சென்ற ரயிலில் என்னை அழைத்துச் சென்றனர். அந்த ரயில் விசாகப்பட்டினம், குண்டக்கல், விஜயவாடா, ஆனந்தப்பூர் வழியாகச் சென்றது. திருப்பதி வந்ததும் நான் இறங்கி திருப்பதி ரயில் நிலையத்தை அடைந்தேன். அங்கு புறப்பட தயாராக இருந்த ரயில் தமிழகம் செல்வதை தெரிந்து அதன் முன் நின்று கோஷம் எழுப்பினேன். என்னை ஆந்திரா போலீஸார் கைது செய்து தமிழக போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

பின்னர் சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். சென்னை நீதிமன்றத்திலும், பின்னர் கரூர் நீதிமன்றத்திலும் ஆஜர்படுத்தப்பட்டேன். அப்போது, இந்த விவரங்களை நீதித்துறை நடுவரிடம் தெரிவித்தேன். ஆனால், நீதித்துறை நடுவர் பதிவு செய்ய மறுத்து விட்டார். இவ்வாறு முகிலன் கூறியுள்ளார்.

பின்னர், அரசு தரப்பில் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆஜராக கால அவகாசம் கோரப்பட்டதால் விசாரணையை நவ. 13-க்கு நீதிபதி தள்ளிவைத்தார்.


தலைமறைவான நாட்கள்நீதிமன்றம்முகிலன் பரபரப்பு தகவல்உயர் நீதிமன்ற கிளைமனு தாக்கல்சுற்றுச்சூழல் ஆர்வலர்சிபிசிஐடி போலீஸார்

You May Like

More From This Category

More From this Author