

சென்னை
ஜேப்பியார் குழுமத்தில் ரூ.350கோடிக்கு வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக வருமானவரித் துறை தெரிவித்துள்ளது. மேலும், ரூ.5 கோடிரொக்கம், ரூ.3 கோடி மதிப்புள்ளநகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜே.பங்குராஜ் என்ற ஜேப்பியார், 1988-ம் ஆண்டு கல்வி அறக்கட்டளையைத் தொடங்கினார். இந்தக் கல்வி குழுமத்தின் கீழ்சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, ஜேப்பியார் மாமல்லன் பொறியியல் கல்லூரி, சத்யபாமா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, புனித மேரி மேலாண்மை கல்வி நிறுவனம், பனிமலர் பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி உட்பட 15 கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
இதுதவிர தண்ணீர் கேன் மற்றும்தயிர் தயாரிப்பு நிறுவனங்களையும் நடத்தி வருகிறது. இதேபோல் இந்த நிறுவனத்துக்கு கன்னியாகுமரி மாவட்டம் முட்டத்தில் மீன்பிடி துறைமுகமும் உள்ளது.
இந்நிலையில், இந்த நிறுவனம் வருமானவரி ஏய்ப்பில் ஈடுபடுவதாகவும் மாணவர்கள் கல்லூரிகளில் செலுத்தும் உண்மையான கட்டணத்தை மறைத்து, கட்டணத்தை குறைத்துக் காட்டி வரி செலுத்துவதாகவும் வருமான வரித்துறைக்கு ஏராளமான புகார்கள் சென்றுள்ளன. இதன் அடிப்படையில் வருமானவரித் துறையினர் விசாரணை செய்தனர். இதில், அந்த நிறுவனம் வரி ஏய்ப்பு செய்வது தொடர்பான உறுதியான தகவல்கள் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.
4 நாட்கள் சோதனை
இதன் அடிப்படையில், வருமானவரித் துறையினர் செம்மஞ்சேரியில் உள்ள ஜேப்பியார் குழுமத்துக்குச் சொந்தமான பொறியியல் கல்லூரி, பள்ளி, சோழிங்கநல்லூரில் உள்ள அந்த நிறுவனத்தின் உரிமையாளர் வீடுகள், சென்னையின் பிற பகுதிகளில் உள்ள பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், முட்டத்தில் உள்ள ஜேப்பியார் மீன்பிடி துறைமுகம் உள்ளிட்ட 32 இடங்களில் கடந்த 7-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை சோதனை நடத்தினர்.
இந்தச் சோதனையில் சுமார் 200 வருமானவரித் துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். சோதனை நடைபெற்ற இடங்களில் காவல் துறையினர் பாதுகாப்பு வழங்கினர். சோதனையில் வரி ஏய்ப்பு தொடர்பாக பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், ஜேப்பியார் கல்விக் குழுமம் மற்றும் நிறுவனங்களில் ரூ.350 கோடி அளவுக்கு வரிஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமானவரித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் ரூ.5 கோடி ரொக்கம் மற்றும் ரூ.3 கோடி மதிப்புள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் வருமானவரித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.