மாணவர்களின் நல்லொழுக்கத்தை மேம்படுத்த சிகை அலங்கார நிபுணர்களுக்கு ஆசிரியர்கள் வேண்டுகோள்: சமூக வலைதளத்தில் வைரலாகும் கடிதம்

சமூக வலைதளத்தில் வெளியான ஆசிரியர்களின் வேண்டுகோள் கடிதம்.
சமூக வலைதளத்தில் வெளியான ஆசிரியர்களின் வேண்டுகோள் கடிதம்.
Updated on
1 min read

இரா.தினேஷ்குமார்

திருவண்ணாமலை

மாணவர்களின் நல்லொழுக்கத்தை மேம்படுத்த சிகை அலங்கார நிபுணர்களும் உதவ வேண்டும் என தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் வெளியிட்டுள்ள கடிதம் சமூக வலைதளத்தில் வைரலாகி யுள்ளது.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நல்லொழுக்கத்தை அடையாளப்படுத்தி காட்டுகிறது, அவர்களது சிகை அலங்காரம். மாணவர்கள் மிடுக்காக பள்ளிக்கு வர வேண்டும் என்ற கண்டிப்பு மற்றும் கட்டுப்பாடு என்பது கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்தது. தற்போது, மாணவர்களை கண்டிக்கும் ஆசிரியர்கள் மீது காவல்நிலையத்தில் வழக்கு மற்றும் துறை ரீதியான நடவடிக்கை போன்ற காரணத்தால், மாணவர்களின் நல்லொழுக்கத்தில் தலையிடுவதை பெரும்பாலான ஆசிரியர்கள் தவிர்த்து வருகின்றனர். இது மாணவர்களுக்கு சாதகமாகி விட்டது.

அதன் எதிரொலியாக, திரைப் படங்களின் வரும் நடிகர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களை போன்று மாணவர்கள் சிகை அலங்காரம் செய்து கொண்டு பள்ளிக்கு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். தனியார் பள்ளிகளில் கண்டிப்பு இருப்பதால், மாணவர்களின் சிகை அலங்காரத்தில் பெற்றோரும் கவனம் செலுத்தி வருகின்றனர்.

அதே நேரத்தில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், பல்வேறு வகைகளில் சிகை அலங்காரம் செய்து கொண்டு சர்வ சாதாரணமாக பள்ளிக்கு வருகின்றனர். இது, மாணவர்களை தவறான பாதைக்கு அழைத்து செல்வதற்கு அடித்தளமிடுகிறது. இதற்கு, தீர்வு காண வேண்டும் என்றால் சிகை அலங்காரம் செய்பவர்களும் ஒத்துழைக்க வேண்டும் என ஆசிரியர் பெருமக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக சமூக வலைதளத்தில், ‘சிகை அலங்கார நிபுணர்களுக்கு’ வேண்டு கோள் என்ற தலைப்பில் திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அடுத்த மேலகரம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் கடிதம் வெளியாகி வைரலாகியுள்ளது.

அதில், “மாணவர்களுக்கு ஒழுக்கத்தை மேம்படுத்துவது என்பது ஆசிரியர்களை மட்டும் சார்ந்த விஷயமல்ல. இதில், நம் சமூகத்துக்கும் தொடர்பு உள்ளது. அதில், சிகை அலங்கார நிபுணர்களாகிய நீங்கள் முக்கிய பங்கு வகுக்கின்றீர்கள். உங்களின் செயல்பாடே மாணவர்களின் அகத்தையும் மற்றும் புறத்தையும் அழகுறச் செய்கிறது.

உங்களுக்கு, எமது ஆசிரியர் சமூகத்தின் சார்பாக வாழ்த்துக்கள். ஓர் சிறு கோரிக்கையும் கூட. பள்ளி மாணவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப கோடு போடுதல், பாக்ஸ் கட்டிங், ஒன் சைடு, வி கட், ஸ்பைக் போன்றவற்றை தவிர்த்து, பள்ளி சூழலுக்கு ஏற்றாற் போல், அவர்களுக்கு சிகை அலங் காரம் செய்து கொடுக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். உங்களது செயல், மாணவர்களின் ஒழுக்கத்தை மேம்படுத்த உதவும். வாருங்கள், ஒற்றுமையோடு ஒன்றுபட்டு புதிய தேசத்தை உருவாக்குவோம்” என குறிப்பிட் டுள்ளனர்.

ஆசிரியர்களின் வேண்டுகோளுக்கு கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மிகுந்த வரவேற்பை தெரிவித்து, பாராட்டி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in