Published : 12 Nov 2019 06:52 AM
Last Updated : 12 Nov 2019 06:52 AM

கல்லார் பகுதியில் குவியும் பட்டாம்பூச்சிகள்: வடகிழக்குப் பருவமழை ஓய்வதற்கு அடையாளம்

கோவை

மேட்டுப்பாளையம் அருகே கல்லார் பகுதியில் பல்லாயிரக்கணக்கான, அரிய வகை பட்டாம்பூச்சிகள் குவிந்துள்ளன. இது வடகிழக்குப் பருவமழை ஓய்வதற்கான அடை யாளம் என்கின்றனர், சூழலியல் ஆர்வலர்கள். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:

தென்மேற்குப் பருவமழையின் தொடக்கத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளில் இருந்து லட்சக்கணக்கில் பறக்கத் தொடங்கும் பட்டாம் பூச்சிகள், கிழக்குத் தொடர்ச்சி மலைக்காடு களைச் சென்றடையும்.

அதேபோல, இனவிருத்திக்குப் பின்னர் வடகிழக்குப் பருவமழை யின் இறுதிக் காலத்தில் மீண்டும் புதிய பூச்சிகளின் கூட்டமாக கிழக்குத் தொடர்ச்சி மலைக்காட்டில் இருந்து, மேற்குத் தொடர்ச்சி மலைக்காடுகளை வந்தடையும்.

இந்த இடப்பெயர்ச்சி பல்லா யிரக்கணக்கான ஆண்டுகளாக தவறாமல் தொடரும் ஓர் இயற்கை சார்ந்த தொடர் நிகழ்வாகும். இதன்படி, தற்போது வடகிழக்குப் பருவமழை படிப்படியாக குறைந்து வருவதையும், பருவமழை ஓயப்போவதையும் சுட்டிக்காட்டும் வகையில், கிழக்குத் தொடர்ச்சி மலைக் காடுகளில் இருந்து கூட்டம் கூட்டமாக பட்டாம்பூச்சிகள் மேற்குத் தொடர்ச்சி மலைக்காடுகளை நோக்கி வரத் தொடங்கியுள்ளன.

தமிழகத்தில் 100 முதல் 300 கிலோமீட்டர் தொலைவு வரை வலசை செல்லும் இந்த சின்னஞ்சிறு வண்ணத்துப்பூச்சிகளுக்கு நீண்டதூரம் பறந்து செல்ல கனிம சத்துகள் அவசியம் தேவை. இக்கனிம சத்துகள், ஆறுகள், ஓடைக்கரைகளில் சேகரமாகும் தாது மணல் வெளிகளிலும், காட்டு யானைகளின் சாணத்திலும் கிடைக்கும் என்பதால், இவற்றை பட்டாம்பூச்சிகள் விரும்பி உண்ணும்.

இவையனைத்தும் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத் தில் உள்ள கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள கல்லார் பகுதியில் கிடைக்கும் என்பதால், பல்வகை பட்டாம் பூச்சிகள் இங்கு வந்தபடி உள்ளன.

அண்மையில் தமிழக அரசு சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்ட `தமிழ்மறவன்' பட்டாம்பூச்சி உள்ளிட்ட ஏராளமான அரிய வகை பட்டாம்பூச்சிகள் இங்கு காணப்படுகின்றன. இவற்றை ஆய்வு செய்து, ஆவணப்படுத்துவதற்காக, துறை சார்ந்த வல்லுநர்கள் `பட்டர்பிளை ஹாட் ஸ்பாட்' என்றழைக்கப்படும் கல்லார் பகுதிக்கு வர வேண்டும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x