சேந்தமங்கலம் அருகே கோயிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் சுவாமி சிலைகளை உடைத்து சேதம்: கேமரா பதிவுகளைக் கொண்டு விசாரணை
நாமக்கல்
சேந்தமங்கலம் அருகே பிரசித்தி பெற்ற பெரியசாமி கோயில் சிலைகளை மர்ம நபர்கள் உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேந்தமங்கலம் அருகே கொல்லிமலை அடிவாரமான புதுக்கோம்பையில் பிரசித்தி பெற்ற பெரியசாமி கோயில் உள்ளது. சேந்தமங்கலம் மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு கோயிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்குள்ள சுவாமி சிலைகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
மேலும், கோயில் பூசாரி ரகு வீட்டு கண்ணாடியையும் உடைத்துள்ளனர். சத்தம் கேட்டு பூசாரி வெளியே வருவதற்குள் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பினர். இதுகுறித்து கோயில் பூசாரி சேந்தமங்கலம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
விசாரணையில், கோயில் பூசாரி நியமனம் செய்த விவகாரத்தில் சுவாமி சிலைகள் உடைக்கப்பட்டிருக்கலாம், என சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து, கோயிலில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு விசாரித்து வருகின்றனர். பெரியசாமி கோயில் சிலைகள் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
