மயக்க ஊசி செலுத்தி ஒற்றை யானையை பிடிக்க முயற்சி: மலையடிவாரத்தில் வனத் துறையினர் முகாம்

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அடுத்த அர்த்தநாரி பாளையத்தில் விவசாயிகளை அச்சுறுத்திவந்த ஒற்றை காட்டு யானையை, கும்கி யானைகளின் உதவியுடன் பிடிக்க வனத்துறை யினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

பொள்ளாச்சி வனச்சரகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை கடந்த மே மாதம் நவமலையில் ஒரு முதியவரையும், சிறுமியையும் தாக்கிக் கொன்றது. கடந்த சில வாரங்களாக அர்த்தநாரிபாளையம், பருத்தியூர், ஆண்டியூர் ஆகிய பகுதிகளில் உள்ள விளை நிலங்களுக்குள் நுழைந்து பயிர்களை சேதப் படுத்தியது.

கடந்த 3-ம் தேதி உடுமலை வனச்சரகத்துக்கு உட்பட்ட புளியம்பட்டி வனக்குடியிருப்பில் வசித்து வந்த செல்வகுமார் (28) என்பவரை தாக்கியது. கடந்த 9-ம் தேதி இரவு அர்த்தநாரி பாளையத்தில் ராதாகிருஷ்ணன் என்பவரை தாக்கி கொன்றது. மறுநாள் காலை அதே கிராமத்தைச் சேர்ந்த திருமாத்தாள் என்பவரை தாக்கியது.

ஒற்றை யானையைப் பிடிக்க வலியுறுத்தி நா.மூ. சுங்கம் பகுதியில் நேற்று முன்தினம் மறியலில் மக்கள் ஈடுபட்டனர். வருவாய்த் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி மக்களை சமாதானப்படுத்தி மறியலை கைவிடச்செய்தனர்.

இந்நிலையில் கோழிகமுத்தி யானைகள் முகாமில் இருந்து பாரி, கலீம் என்ற இரு கும்கி யானைகள் அர்த்தநாரிபாளையம் வனப்பகுதிக்கு நேற்று முன்தினம் இரவு கொண்டுவரப்பட்டது. கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ், கால்நடை மருத்துவர்கள் மனோகரன், சுகுமார், கலைவாணன் ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழுவினர் மயக்க ஊசி செலுத்தி யானையைப் பிடிக்க பெருமாள் மலை அடிவாரத்தில் முகாமிட்டுள்ளனர். வனஎல்லையில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் குண்டூருட்டி பாறை என்ற இடத்தில் யானையின் நடமாட்டம் இருப்பது தெரியவந்தது. வனச்சரகர் காசிலிங்கம் தலைமையிலான 60-க்கும் மேற்பட்ட வேட்டைத் தடுப்புக் காவலர்கள் 3 குழுவாக பிரிந்து செருப்படி பாறை, ஆசிரமம், கனவாக காடு ஆகிய வனப்பகுதியில் யானையின் நடமாட்டத்தைக் கண்காணித்து வருகின்றனர். யானையை வனப்பகுதிக்குள் இருந்து வெளியே கொண்டுவர அரிசி மற்றும் மாட்டுத் தீவனங்களை வனஎல்லைப் பகுதியில் வனத் துறையினர் கொட்டிவைத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in