

விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் அண்மையில் பெய்து வரும் தொடர் மழையால் வேளாண் சாகுபடி பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன.
வறட்சி மாவட்டங்களில் ஒன்றான விருதுநகர் மாவட்டத்தில் சுமார் ஒரு லட்சத்து 22 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் உணவு தானிய உற்பத்தி மேற்கொள்ளப்படும். கடந்த 2 ஆண்டு வடகிழக்கு பருமழை கைகொடுத்ததால் சாகுபடி பணிகளை திட்டமிட்டபடி விவசாயிகள் தொடங்கினர். இதனால் வேளாண் உற்பத்தியும் அதிகரித்தது.
ஆனால், நடப்பு பருவத்தில் பருவமழை கைகொடுக்கும் என்பதால் திட்டமிட்டபடி விவசாயப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக மேற்குத் தொடர்ச்சிமலையை ஒட்டியுள்ள பகுதிகளான ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, ராஜபாளையம், சேத்தூர் பகுதிகளில் கனமழை பெய்தது. அதோடு, மேற்குத் தொடர்ச்சிமலை பகுதியிலும் நல்ல மழை பெய்ததால் காட்டாறுகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், ராஜபாளையம் அருகே உள்ள அய்யனார்கோயில் ஆறு, சாஸ்தா கோயில் ஆறு, பிளவக்கல் அணை, செண்பகத் தோப்பில் உள்ள காட்டாறு உள்ளிட்ட ஆறுகளில் நீர் வரத்து அதிகமாக காணப்படுகிறது.
காட்டாறுகளில் நீர் வரத்து உயரந்துள்ளதால் நீர்த்தேக்க அணைகளும் முழு கொள்ளவை எட்டியுள்ளன. சாஸ்தாகோயில் அணையில் தடுப்புகளைத் தாண்டி மறுகால் பாய்ந்து ஏராளமான தண்ணீர் வெளியேறி வந்த விலையில், கடந்த வாரம் பாசனத்திற்காக அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
தொடர் மழையால் அணைகள், நீர் பிடிப்புப் பகுதிகள், குளங்கள், கண்மாய்களில் நீர் நிறைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் பரவலான மழையால் வேளாண் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
இதுகுறித்து, மாவட்ட வேளாண் அலுவலர்கள் கூறுகையில், விருதுநகர் மாவட்டத்தில் நடப்பு ராபி பருவத்தில் 25 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் நெல் பயிரும், 45 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் சிறுதானிய பயிர்களும், 13 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் பயிறு வகைகளும், 21 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் பருத்தி பயிரும் என மொத்தம் 1,04 லட்சம் எக்டேர் பரப்பளவில் பயிர் சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது நாற்றாங்கள் மற்றும் நடவுப் பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.
இப்பருவத்தில் தேவையான போதிய அளவு உரங்கள் தனியார் உரக்கடைகள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்ளிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
அனைத்து தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களிலும் குறைந்த பட்சம் யூரியா, டிஏபி, பொட்டாஷ் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள் இருப்பு வைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றனர்.