Published : 11 Nov 2019 05:32 PM
Last Updated : 11 Nov 2019 05:32 PM

மத்திய அரசு சாலை போடக் கொடுத்த ரூ.5000 கோடி நிதி; பயன்படுத்தாமல் போனதால் திரும்ப எடுத்துக்கொண்டது: ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை

தமிழகத்தில் சாலைகள் அமைக்க மத்திய அரசு ஒதுக்கிய ரூ.5,000 கோடி நிதியை, கமிஷன் கிடைக்கவில்லையென தமிழக அரசு பயன்படுத்தாததால், மத்திய அரசு அதனைத் திரும்பப் பெற்றுவிட்டதாக பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளது என்று ஸ்டாலின் பேசினார்.

இன்று (11-11-2019) திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னை மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் வெல்டிங்மணி இல்லத் திருமண நிகழ்வில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

அப்போது அவர் பேசியதாவது:

“இந்தத் திருமணம், சீர்திருத்த முறையில் சுயமரியாதை உணர்வோடு கூடிய திருமணமாக நடந்தேறியிருக்கிறது. இதுபோன்ற திருமணங்கள் இன்றைக்கு ஏராளமாக நடக்கக்கூடிய காட்சிகளை எல்லாம் நாம் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
ஒரு காலத்தில், இது போன்ற சீர்திருத்தத் திருமணங்கள் நடந்தால், அதைக் கேலி செய்தவர்கள், கிண்டல் செய்தவர்கள், எள்ளி நகையாடியவர்கள், விமர்சனம் செய்தவர்கள் பலர் உண்டு. ஆனால், இப்போது அந்நிலை மாறிவிட்டது.

தமிழகத்தில் நடந்து கொண்டிருப்பது ஆட்சி என்று சொல்லக்கூடாது. மத்திய அரசின் அடிமை ஆட்சி என்றுதான் சொல்ல வேண்டும். தமிழகத்தில் சாலை போடுவதற்காக தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலம் மத்திய அரசு 5,000 கோடி அனுப்பியதாகவும், அந்த நிதியைப் பயன்படுத்தாததால், மத்திய அரசால் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும் பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளது. என்ன காரணம் என்று விசாரித்துப் பார்த்தால், சாலை போடுவதில் கமிஷன் வாங்கத் திட்டமிட்டுள்ளார்கள். அது மறுக்கப்பட்டிருக்கிறது. அதனால் அந்தப் பணம் திருப்பி அனுப்பட்டுள்ள கொடுமை நடந்துள்ளது.

எல்லா துறையிலுமே நீங்கள் பார்த்தீர்கள் என்றால், இந்த ஆட்சியைப் பொறுத்தவரை கமிஷன், கரப்ஷன், கலெக்சன். இதுதான் நடந்துகொண்டிருக்கிறது. ஆகவே 9 ஆண்டுகாலமாக தமிழ்நாட்டு மக்கள் இந்தக் கொடுமையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதனிடையே உள்ளாட்சித் தேர்தல் வரப்போகிறது. அதை தொடர்ந்து சட்டப்பேரவை தேர்தல் வரப்போகிறது. ஏற்கெனவே, எந்தத் தேர்தலாக இருந்தாலும் தோழர்கள் முனைப்புடன் பணியாற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதே போல், எதிர் வரும் தேர்தல்களிலும் உங்கள் பணிகள் இருந்திட வேண்டும்”.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x