

சென்னை
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஒப்புதல் இல்லாமல் நிர்வாகிகளை நீக்கினால் கடும் நடவடிக்கை எடுப்பேன் என வேலூர் மாவட்டத் தலைவருக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருவிளையாடல் படத்தில் வரும் வசனம்போல் ‘சேர்ந்தே இருப்பது காங்கிரஸும் கோஷ்டியும், சேராதிருப்பது தலைவர்கள் கரம்’ என ஒரு காலத்தில் சொல்வார்கள். அகில இந்திய தலைமை ஆதரவு பெற்றோர், மாநில முக்கிய நிர்வாகிகளின் கோஷ்டி என பல கோஷ்டிகள் காங்கிரஸில் இருக்கும். இன்றும் காங்கிரஸுக்குள் திருநாவுக்கரசர், சிதம்பரம், தங்கபாலு, ஈவிகேஎஸ் இளங்கோவன், கிருஷ்ணசாமி என எந்த அணியிலும் இல்லாதவர்களும் உள்ளனர்.
தற்போது உள்ள தலைவர் கே.எஸ்.அழகிரி ப.சிதம்பரம் ஆதரவாளர். ஆனாலும் ப.சிதம்பரம் ஆதரவாளரான கராத்தே தியாகராஜன் இவரை ஆதரிக்கவில்லை. இதுபோன்ற பல விஷயங்கள் காங்கிரஸில் இருந்தாலும் சமீப ஆண்டுகளில் அடிதடி, மோதல் இல்லாமல் கருத்து மோதல் மட்டும் இருந்து வந்தது. பின்னர் அதுவும் அதிகம் இல்லாமல் அருகி வந்தது.
இந்நிலையில் உட்கட்சி விவகாரத்தில் வேலூர் மாவட்டத் தலைவருக்கு பகிரங்கமாக அறிக்கை மூலம் காங்கிரஸ் தலைவர் அழகிரி எச்சரிக்கை விடுத்துள்ளார். கட்சிக்குள் ஒழுங்கீனமாக நடந்தால் கடும் நடவடிக்கை எடுப்பேன் என அவர் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து கே.எஸ்.அழகிரி இன்று வெளியிட்ட அறிக்கை:
“தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரின் ஒப்புதல் இல்லாமல், மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவர்கள், ஏற்கெனவே பொறுப்பில் இருக்கும் மாவட்ட நிர்வாகிகள், வட்டார, நகராட்சி, பேரூராட்சிகளின் தலைவர்கள் மற்றும் இதர துறைகளைச் சார்ந்த நிர்வாகிகளைப் பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் கிடையாது என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோல், மாவட்ட கமிட்டிக்கு கீழ் உள்ள அமைப்புகளுக்கு மாநிலத் தலைமையின் ஒப்புதல் இல்லாமல் புதிதாக எந்த பொறுப்புக்கும் யாரையும் நியமனமும் செய்ய முடியாது. வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஜே.ஜோதி, சில நிர்வாகிகளை அவர்கள் ஏற்கெனவே வகித்து வரும் பொறுப்புகளிலிருந்து விடுவித்து, அவர்களுக்குப் பதிலாக புதிய நிர்வாகிகளை நியமனம் செய்துள்ளதாக நாளேடுகளில் செய்தி வந்துள்ளது.
ஜே.ஜோதியின் தன்னிச்சையான இந்த அறிவிப்பு கட்சி விதிகளுக்குப் புறம்பானது மற்றும் செல்லத்தக்கது அல்ல. வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜே.ஜோதியால் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் அனைவரும் அவர்கள் வகித்து வந்த பொறுப்புகளில் தொடர்ந்து செயல்படுவார்கள்.
அதேபோல், புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளின் நியமனங்கள் அனைத்தையும் ரத்து செய்வதாக இதன்மூலம் அறிவிக்கின்றேன். இனியும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் என எச்சரிக்க விரும்புகிறேன்”.
இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.