

சென்னை
டியூசிஎஸ் அதிகாரியிடம் செல்போன் பறித்த இரண்டு இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் லிங்கம்பட்டியைச் சேர்ந்தவர் அடைக்கன் (49). இவர் சென்னை கோபாலபுரத்தில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். சென்னை திருவல்லிக்கேணி தெருவில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்துத் தங்கி, பணிக்குச் சென்று வருகிறார்.
கடந்த 8-ம் தேதி கலை 9 மணி அளவில் வழக்கம்போல் பணிக்குச் சென்ற அடக்கன், செல்லப்பிள்ளையார் கோயில் தெரு வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக மஞ்சள் கலர் இருசக்கர வாகனத்தில் வந்த 2 இளைஞர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் அவரிடமிருந்த விலை உயர்ந்த செல்போனைப் பறித்துச் சென்றனர்.
இதுபற்றி ஜாம் பஜார் காவல் நிலையத்தில் அடைக்கன் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த போலீஸார் நேற்று மாலை வாகன எண்ணை வைத்து செல்போனைப் பறித்துச் சென்ற இளைஞர்களைக் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் ராயப்பேட்டை பேகம் சாகிப் 5-வது தெருவில் வசிக்கும் முகமது ரவூஃப் (21), இம்ரான் பாட்சா (21) என்பது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீஸார் அவர்களிடமிருந்து 12 செல்போன்களை பறிமுதல் செய்ததாகக் கூறப்படுகிறது.
சமீபகாலமாக சிசிடிவி கேமரா காரணமாக செயின் பறிப்பு, செல்போன் பறிப்புகள் குறைந்திருந்த நிலையில் சில வாரங்களாக அங்கொன்றும் இன்கொன்றுமாக செல்போன் பறிப்பு, வழிப்பறி நபர்கள் தலைதூக்கத் தொடங்கியுள்ளனர்.