

கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சியில் வாகனத் தணிக்கையின்போது மூதாட்டி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஒரு பயிற்சி எஸ்ஐ உள்பட 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி காவல் நிலைய போலீஸார் நேற்று மாலை கள்ளக்குறிச்சி-கச்சிராயப்பாளையம் சாலையில் தீயணைப்புத்துறை அலுவலகம் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியே உலகங்காத்தான் கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் (23) என்ற இளைஞர், தனது தாயார் ஐயம்மாள் (63) என்பவரை அழைத்துச் சென்றார். அப்போது அவர்களைக் காவலர்கள் மறித்தபோது, செந்தில்குமார் நிற்காமல் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதனால், தணிக்கையில் ஈடுபட்டிருந்த காவலர் லத்தியை வீசியதாகவும், லத்தி ஐயம்மாள் மீது பட்டு, அவரும், பைக்கை ஓட்டிச் சென்ற செந்தில்குமாரும் பைக்குடன் கீழே விழந்ததாகவும் கூறப்படுகிறது. இதில் ஐயம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்தச் சம்பவத்தைக் கண்டித்து ஐயம்மாள் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று கள்ளக்குறிச்சி மருத்துவமனை எதிரே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து வாகனத் தணிக்கையினபோது அஜாக்கிரதையாக செயல்பட்டதாக பயிற்சி எஸ்ஐ வேல்முருகன், சிறப்பு எஸ்ஐ மணி, தலைமைக் காவலர்கள் இளையராஜா, சந்தோஷ் மற்றும் செல்வம் உள்ளிட்ட 5 பேரை ஆயுதப்படைக்கு மாற்றி காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் காவல் துறையினர் மீது கண்துடைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், உயிரிழப்புச் சம்பவத்திற்குக் காரணமானவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் நேற்று கள்ளக்குறிச்சி மருத்துவமனை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து மேற்கூறப்பட்ட 5 காவலர்களையும் இன்று (நவ.11) பணியிடை நீக்கம் செய்திருப்பதாக விழுப்புரம் சரக டிஐஜி அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.