

சென்னை
வெங்காயம் பதுக்கலைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை கோபாலபுரத்தில் உள்ள பண்ணை பசுமை காய்கறிக் கடை மற்றும் பல்பொருள் சிறப்பு அங்காடியில் விற்கப்படும் காய்கறிகளின் தரம் குறித்து உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் இன்று (நவ.11) ஆய்வு மேற்கொண்டார்.
இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் காமராஜ், வெங்காயத்தின் விலை அதிகரித்து வருவதால், கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்களில் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்படுவதாகவும், விலையேற்றத்தைக் கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இது தொடர்பாக அமைச்சர் காமராஜ் மேலும் கூறுகையில், "மழைக்காலம் என்பதால் வெங்காயம் மட்டுமல்லாமல் மற்ற காய்கறிகளின் விலையிலும் சற்று மாற்றம் வரும். அந்த விலையை அரசு உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறது. அதனடிப்படையில், காய்கறிகளின் விலை கட்டுக்குள் வைக்கப்பட்டிருக்கிறது.
பொதுமக்கள் வெங்காய விலையேற்றம் குறித்து எந்த நேரத்தில் புகார் அளித்தாலும் அதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். வெங்காயப் பதுக்கலைத் தடுப்பதற்காகவும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். தமிழக அரசு இதுபோன்ற பதுக்கல்களுக்கு எப்போதும் இடம் கொடுப்பது கிடையாது. உணவுப் பொருட்கள் பதுக்கல்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவோம் என, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவே தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து இதுகுறித்து உத்தரவிட்டுக் கொண்டிருக்கிறார். அதனடிப்படையில் எந்த விதமான பதுக்கல்களும் தற்போது இல்லை. அதுகுறித்து ஏதேனும் தகவல் வந்தால் பதுக்குபவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்" என அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.