விடுதி அறையில் கஞ்சா ஜெல் தயாரிப்பு; தீ பரவியதில் 2 பேர் உடல் கருகி மருத்துவமனையில் அனுமதி

காட்சிப்படம்
காட்சிப்படம்
Updated on
1 min read

சென்னை

திருவேற்காடு அருகில் விடுதி ஒன்றில் போதை தரும் ஒருவகை கஞ்சா ஜெல்லைத் தயாரிக்க முயன்ற போது அறையில் தீ பரவியதில் 2 பேர் தீக்காயங்களுடன் ஆபத்தான முறையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையை அடுத்த திருவேற்காடு அருகிலுள்ள அயனம்பாக்கம் மாந்தோப்பு காலனியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் நேற்று ரேஸ் ராஜா, விக்னேஷ், மாசி, முகமது ரசாக், ராஜேஷ் ஆகிய 5 பேர் அறை எடுத்துத் தங்கியுள்ளனர். இதில் மாசி, முகமது ரசாக், ராஜேஷ் ஆகியோர் மதுபானம் வாங்குவதற்காக வெளியே செல்ல ரேஸ் ராஜாவும், விக்னேஷும் அறையில் தங்கியுள்ளனர்.

அறைக்குள் தாங்கள் கொண்டு வந்த எலக்ட்ரிக் ஸ்டவ் மூலம் கஞ்சா, ஸ்பிரைட் மற்றும் ரசாயனக் கலவை கலந்து ஒருவித ஜெல்லைத் தயாரிக்க இருவரும் முயன்றனர். இதில் அறை முழுவதும் ரசாயனம் கலந்த கலவை புகையாகப் பரவ, பக்கத்தில் இருப்பவர் தெரியாத அளவுக்கு புகை சூழ்ந்தது.

அந்த நேரம் ரேஸ் ராஜா என்பவர் சிகரெட் பற்றவைக்க லைட்டரை உபயோகிக்க, அதனால் எழுந்த தீ ஜுவாலையால் அறை முழுவதும் தீ பரவியது. இதில் இருவரும் சிக்கிக்கொண்டனர். இருவரின் உடல் முழுவதும் தீப்பற்றிய நிலையில் அறையை விட்டு அடித்துப் புரண்டு இருவரும் வெளியே ஓடி வந்தனர்.

வேகமாக ஓடியதால் உடலில் மேலும் தீ பரவ, கீழே விழுந்தனர். இதைப் பார்த்த விடுதி ஊழியர்கள், அக்கம் பக்கத்தினர் இருவரின் உடல் மீது எரிந்த தீயை அணைத்துக் காப்பாற்றி அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

உடலில் அதிகப்படியான தீக்காயம் இருந்ததால் மேல் சிகிச்சைக்காக இருவரும் அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து திருவேற்காடு போலீஸார் நடத்திய விசாரணையில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்தன. வெளியே சென்ற மாசி, முகமது ரசாக், ராஜேஷ் மூவரையும் திருவேற்காடு போலீஸார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கஞ்சா தவிர வேறு போதை வஸ்துகள் தயாரித்தார்களா? போதை ஜெல் தயாரிக்க முனைந்தது ஏன். இவர்கள் இதுபோன்று தயாரித்து விற்பனை செய்து வந்தார்களா? என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in