Published : 11 Nov 2019 12:46 PM
Last Updated : 11 Nov 2019 12:46 PM

பொதுக்குழு தீர்மான விளக்கக் கூட்டம்; திண்ணை பிரச்சாரம்: திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்

சென்னை

தமிழகம் முழுவதும் ஊர்தோறும், திண்ணை தோறும் பிரச்சாரம் செய்ய வேண்டும் என, திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று (நவ.11) அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

"நேற்று நடைபெற்ற திமுக பொதுக்குழுக் கூட்டத்தில், தமிழக வரலாற்றின் இருண்ட காலம் என்று சொல்லும் அளவுக்கு, பகல் கொள்ளை - உளுத்துப் போன ஊழல் - எதற்கும் லஞ்சம் - எங்கும் கமிஷன் என்று, அவமானகரமான ஆட்சி ஒன்றை நடத்தி வரும் அதிமுக அரசையும் மற்றும் அது தனது அடிவருடும் ஆட்சி என்பதால், அதற்கு அனைத்து வகையிலும் பலத்த பாதுகாப்பு அளித்துவரும் மத்திய பாஜக அரசுக்குக் கண்டனம் தெரிவிப்பது உள்ளிட்ட 20 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளன.

அந்தத் தீர்மானங்களை மக்கள் மத்தியில் எடுத்துச் சென்று விளக்கிட, தமிழகமெங்கும் அனைத்து மாவட்டங்களிலும், மிகச் சிறப்பான பயனளித்திடும் வகையில், நவம்பர் 16-ம் தேதி திமுக பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக் கூட்டங்களை நடத்திட கழக மாவட்டச் செயலாளர்களின் இந்தக் கூட்டம் தீர்மானிக்கிறது.

மேற்கண்ட 20 தீர்மானங்களில் குறிப்பாக , பொய்களைச் சொல்லியே பொழுது போக்கி, இரட்டை வேடம் போடும் அதிமுக, ஊழலின் ஊற்றுக்கண்ணாகத் திகழும் அதிமுக ஆட்சி, ஊழலில் திளைக்கும் அதிமுக அமைச்சர்களின் மீதான வருமான வரித்துறை ரெய்டு - உரிய விசாரணை நடவடிக்கைகளில் இருந்து காப்பாற்றும் மத்திய பாஜக அரசு, மத்திய பாஜக அரசின் தமிழக விரோத திட்டங்களுக்குத் துணைபோகும் அதிமுக அரசு ஆகிய தீர்மானங்களை, மக்கள் மனங்களில் ஆழப் பதிந்திடும் வண்ணம், துண்டுப் பிரசுரங்கள் தயார் செய்து, தமிழகம் முழுவதும் ஊர்கள்தோறும் விநியோகித்திட ஆவன செய்வதென்றும்; தீர்மானங்களை விளக்கி எளிய முறையில் திண்ணைகள் தோறும் பிரச்சாரங்கள் மேற்கொள்வதென்றும் திமுக மாவட்டச் செயலாளர்களின் இந்தக் கூட்டம் தீர்மானிக்கிறது".

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x