Published : 11 Nov 2019 12:27 PM
Last Updated : 11 Nov 2019 12:27 PM

சென்னையில் காற்று மாசு ஏற்பட்டுள்ளதா? - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்

ஆலோசனையில் ஈடுபட்ட அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

சென்னை

சென்னையில் காற்று மாசு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னையில் காற்று மாசு ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியானதையடுத்து இன்று (நவ.11) அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், "காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏற்படுகிறபோது, சூரியக் கதிர்கள் முழுமையாக உள்ளே வருவதற்கு வாய்ப்புகள் இருக்காது. அதேபோல, கடல் காற்றின் ஈரப்பதம் குறைவாக இருக்கும். வாகனங்களில் இருந்து வெளியாகும் புகை, கட்டுமானப் பணிகளின்போது ஏற்படும் தூசு, உள்ளிட்ட பல்வேறு காரணாங்களால் காற்று மாசு ஏற்படுகிறது.

மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் கீழ் தமிழகத்தில் 28 மாசுக் கட்டுப்பாடு தர ஆய்வு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றுள் சென்னையில் மட்டும் 8, கோவையில் 3, மதுரையில் 3, சேலத்தில் 1, திருச்சியில் 5, தூத்துக்குடியில் 3, மேட்டூர் 2, கடலூர் 3 என 28 இடங்களில் அமைந்துள்ளன.

காற்றின் தரத்தைக் கண்டறிவதற்கான அளவுகோலாக 0-50 வரை இருந்தால் நன்றாக இருக்கிறது எனவும், 51-100 வரை இருந்தால் போதுமானது எனவும், 101-200 வரை இருந்தால் மிதமானது எனவும், 201-300 வரை இருந்தால் மோசமானதாக இருக்கிறது என்றும், 301-400 வரை இருந்தால் மிக மோசமானது எனவும், 401-500 வரை இருந்தால் தீவிரமாகவும், 501-க்கு மேல் இருந்தால் மிகத் தீவிரம் அல்லது அவசர காலநிலை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எல்லா நிலையங்களிலும் இதுகுறித்த தகவல்களை வருவாய் நிர்வாக ஆணையர் சேமித்தார். சென்னையில் அமைக்கப்பட்டுள்ள எல்லா நிலையங்களிலும் மோசமான நிலை இல்லை. 1-2 இடங்களில் மோசமாக இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல, சிறப்பாக இருக்கும் நிலையங்கள் குறித்த புள்ளிவிவரங்களும் கிடைத்திருக்கின்றன. இதுகுறித்து மக்கள் பயப்பட வேண்டாம்.

மருத்துவமனைகளில், சுவாசக் கோளாறுகள் சம்பந்தமாக மக்கள் சிகிச்சைக்கு வந்திருக்கிறார்களா என சுகாதாரத் துறையிடம் கேட்டோம். குறிப்பாக சென்னையில் வந்திருக்கிறதா என கேட்டோம். காற்று மாசால் சுவாசக் கோளாறுகள் வந்திருப்பதாக யாரும் சிகிச்சைக்கு வரவில்லை என, சுகாதாரத் துறை நம்பிக்கையுடன் தெரிவித்திருக்கிறது. ஆனால், பருவ காலங்களில் ஏற்படும் சளி உள்ளிட்டவற்றால் ஏற்படும் மூச்சுக் கோளாறுகளுக்கான சிகிச்சைகள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன எனத் தெளிவாகச் சொல்லியிருக்கின்றனர்.

2-3 நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்த நிலை இப்போது இல்லை. படிப்படியாக மாறி வருகிறது".

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x