

சென்னை குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் கிருஷ்ணா கால்வாய் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
சென்னையின் குடிநீர் தேவைக்காக தமிழகம் மற்றும் ஆந்திர அரசுகளுக்கிடையே தெலுங்கு- கங்கை ஒப்பந்தம் கடந்த 1983-ம் ஆண்டு போடப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின்படி, ஆண்டு தோறும் இரு தவணையாக 12 டி.எம்.சி., அளவு கிருஷ்ணா நதி நீரை தமிழகத்துக்கு, ஆந்திர அரசு வழங்க வேண்டும்.
இதன்படி, ஆந்திர அரசு அளிக்கும் கிருஷ்ணா நதி நீரை, ஆந்திர மாநிலத்தில் உள்ள கண்டலேறு அணையிலிருந்து, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி ஏரிக்கு கொண்டு வருவதற் காக 177.275 கி.மீ., தூரத்துக்கு கால்வாய் அமைக்கும் பணி கடந்த 1983 முதல் 1996-ம் ஆண்டு வரை நடந்தது. இதையடுத்து, 1996-ம் ஆண்டு முதல், கிருஷ்ணா நதி நீர், தமிழகத்துக்கு வந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில், தற்போது கண்டலேறு அணை வறண்டு விட்டதால் கால்வாயில் கிருஷ்ணா நதி நீர் திறந்து விடுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, தற்போது கிருஷ்ணா கால்வாய் வரும் தமிழகப் பகுதிகளில் சேத மடைந்த பகுதிகளை சீரமைக்கும் பணியில் பொதுப்பணித் துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து, பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்த தாவது: கன மழையின் காரணமாக கிருஷ்ணா கால்வாய் கரைகள் பல இடங்களில் சேதமடைந்துள் ளன. கடந்த ஆண்டு சட்டப் பேரவையில், 110 விதியின் கீழ் 19.88 கோடி ரூபாய் மதிப்பில் கால்வாய் கரைகள் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
இதனையடுத்து, கிருஷ்ணா கால்வாயில் தமிழகப் பகுதியில் பொதுப்பணித் துறை சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், ஊத்துக்கோட்டை அருகே உள்ள ஜீரோ பாயின்ட் முதல் பூண்டி ஏரி வரையான 25.275 கி.மீ. தூரத்தில், 13-வது கி.மீ. முதல் பூண்டி ஏரி வரை உள்ள கால்வாய் கரைகளில் 32 இடங்களில் கரை கள் மிகவும் சேதமடைந்து இருப் பது கண்டறியப்பட்டது. இதனை யடுத்து, கால்வாய் கரைகள் சீரமைப்பு பணி கடந்த மாதம் 9-ம் தேதி முதல் தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த பணியில், கரையின் உயரம் அதிகமாக உள்ள மிகவும் சேதமடைந்த 23 இடங்களில் அதிகப்படியான மண்ணை அகற்றி விட்டு கான்கிரீட் தடுப்புச் சுவர்கள் அமைக்கப்பட்டு வருகிறது. கரையின் உயரம் குறைவாக உள்ள பகுதிகளில், மிகவும் சேத மடைந்த 9 இடங்களில் அகலம் குறைவான சாய்வு விகிதத்துடன் கூடிய சேதமடைந்த சிமெண்ட் சிலாப்புகளை அகற்றிவிட்டு, அகலம் அதிகமான சாய்வு விகிதத் துடன் கான்கிரீட் பேவர் எந்திரம் மூலம் கான்கிரீட் லைனிங் அமைத்து வருகிறோம்.
சுமார் 5 கி.மீ. தூரம் நடக்கும் கிருஷ்ணா கால்வாய் கரைகள் சீரமைப்பு பணியில் 50 சதவீதப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இன்னும் இரண்டு மாதங்களில் சீரமைப்பு பணி முடிவு பெறும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.