

சென்னை
டி.என்.சேஷன் சிறந்த நிர்வாகியாகவும் கடின உழைப்பாளியாகவும் திகழ்ந்தார் என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரும், தேர்தல் ஆணைய வரலாற்றில் சிறப்பாகச் செயல்பட்டவருமான மகசேசே விருது பெற்ற டி.என்.சேஷன் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 87.
அவருடைய மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், முதல்வர் பழனிசாமி இன்று (நவ.11) வெளியிட்ட இரங்கல் செய்தியில், "முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையரும், ஓய்வு பெற்ற மூத்த இந்திய ஆட்சிப்பணி அதிகாரியுமான டி.என்.சேஷன் உடல்நலக் குறைவால் 10.11.2019 அன்று காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.
சேஷன் இந்திய ஆட்சிப்பணி அதிகாரியாக பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்தவர். இவர் தலைமை தேர்தல் ஆணையராக பணியாற்றிய காலகட்டத்தில், தேர்தல் நடைமுறைகளில் பல்வேறு சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தவர் என்ற பெருமைக்குரியவர். தமிழ்நாடு அரசின் பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளை வகித்தவர்.
சேஷன் சிறந்த நிர்வாகியாகவும் கடின உழைப்பாளியாகவும், அனைவரிடமும் அன்பாகப் பழகும் தன்மையுடையவராகவும் திகழ்ந்தார்.
இந்தியாவின் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் சேஷனை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்," என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.