Last Updated : 11 Nov, 2019 11:05 AM

 

Published : 11 Nov 2019 11:05 AM
Last Updated : 11 Nov 2019 11:05 AM

பொள்ளாச்சி அருகே காட்டு யானையைப் பிடிக்க வனத்துறையினர் தீவிரம்; 2 கும்கி யானைகள் வரவழைப்பு

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே காட்டு யானையைப் பிடிக்க வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

பொள்ளாச்சி அடுத்த அர்த்தனாரி பாளையம், பருத்தியூர், ஆண்டியூர் ஆகிய பகுதிகளில் கடந்த சில தினங்களாக வனப்பகுதியை விட்டு வெளியேறிய காட்டு யானை விளைநிலங்களுக்குள் சென்று பயிர்களைச் சேதப்படுத்தி வந்த நிலையில், விவசாயிகளையும் தாக்கி வந்தது . இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ராதாகிருஷ்ணன் என்பவர் தோட்டத்திற்குள் சென்று அவரைத் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அதையடுத்து நேற்று அதிகாலை திருமாத்தாள் என்பவரைத் தாக்கியது. அவர் பலத்த காயங்களுடன் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையடுத்து நேற்று அப்பகுதி மக்கள் இந்த யானையைப் பிடித்து கூண்டில் அடைக்க வலியுறுத்தி வால்பாறை சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கு வந்த காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். யானையைப் பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதியளித்தனர். அதன் பிறகு சாலை மறியல் கைவிடப்பட்டது.

அதைத்தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் இன்று (நவ.11) டாப் சிலிப் பகுதியில் இருந்து கலீம் மற்றும் பாரி ஆகிய இரு கும்கி யானைகளை வரவழைத்தனர். வனத்துறையினர் அர்த்தனாரி பாளையம் பெருமாள் கோயில் பகுதியில் தற்போது முகாமிட்டுள்ளனர். காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்து வரகளியாறு பகுதியில் கூண்டில் அடைக்கத் திட்டமிட்டுள்ளனர்.

தற்போது முகாமில் பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பக இணை இயக்குநர் மாரிமுத்து, மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் மற்றும் ஆறு வனச்சரக வனத்துறையினர் மற்றும் மருத்துவர்கள் சுகுமார், மனோகரன், கலைவாணன் ஆகியோர் வனத்துக்குள் சென்று மயக்க ஊசி செலுத்தி யானையைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x