Published : 11 Nov 2019 09:31 AM
Last Updated : 11 Nov 2019 09:31 AM

பெங்களூரு - காரைக்கால் பயணிகள் ரயில் இன்ஜின் தடம் புரண்டது: தருமபுரி அருகே 4 மணி நேரத்துக்கும் மேல் தவித்த பயணிகள்

தருமபுரி மாவட்டம் காடுசெட்டிப்பட்டியில் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்ட பெங்களூரு-காரைக்கால் பயணிகள் ரயிலின் இன்ஜின் சக்கரம்.

கிருஷ்ணகிரி/தருமபுரி

பெங்களூரு - காரைக்கால் பயணிகள் ரயிலின் இன்ஜின் தருமபுரி மாவட்டம் காடுசெட்டிப்பட்டியில் நேற்று தடம் புரண்டது. ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் தப்பினர்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து காரைக்கால் செல்லும் பயணிகள் ரயில் நேற்று காலை 7.15 மணிக்கு புறப்பட்டது. இந்த ரயில் ஓசூர், ராயக்கோட்டை ரயில் நிலையங்களைக் கடந்து காலை 9.45 மணியளவில் தருமபுரி மாவட்டம் காடுசெட்டிப்பட்டி என்னுமிடத்தில் சென்றபோது, ரயில் இன்ஜினின் முன்புற சக்கரம் தண்டவாளத்தை விட்டு இறங்கி தடம் புரண்டது. சத்தம் எழுந்ததைக் கேட்டு உஷாரான ரயில் ஓட்டுநர், சாமர்த்தியமாக செயல்பட்டு உடனடியாக ரயிலை நிறுத்தினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர்.

இதுதொடர்பாக பெங்களூருதென்மேற்கு ரயில்வே அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பெங்களூருவில் இருந்துரயில் விபத்து மீட்புக் குழுவினர், பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் தனி ரயிலில் காடுசெட்டிப்பட்டிக்கு அனுப்பி வைக்கப்பட் டனர்.

தடம் புரண்ட ரயில் இன்ஜின் கிரேன் மூலம் அகற்றப்பட்டது. மாற்று இன்ஜின் மூலம் மதியம் 1.20 மணியளவில் ரயில் பெட்டிகள் ராயக்கோட்டைக்கு இழுத்துச் செல்லப்பட்டன. ரயில் பெட்டிகளில் 4 மணி நேரத்துக்கும் மேல் தவித்த பயணிகள், ராயக்கோட்டை ரயில்வே நிலையத்தில் இறங்கிவிடப்பட்டனர். இதையடுத்து பயணிகள், பேருந்துகள் மூலம் புறப்பட்டுச் சென்றனர்.

இந்நிலையில், ரயில் தடம் புரண்டதால், கோவையில் இருந்து புறப்படும் குர்லா எக்ஸ்பிரஸ் ரயில் (11014), சேலத்தில் இருந்து மொரப்பூர், ஜோலார்பேட்டை வழியாக பெங்களூருவுக்கு மாற்று வழித்தடத்தில் இயக்கப்பட்டது.

ரயில் இன்ஜின் தடம் புரண்ட இடத்தில், தண்டவாளத்தில் இருந்து இரும்புத் துண்டு துண்டிக்கப்பட்டிருந்ததால் அதை சரி செய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். நேற்று மாலை ரயில் போக்குவரத்து சீரானது. இவ்விபத்து குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x