Published : 11 Nov 2019 09:28 AM
Last Updated : 11 Nov 2019 09:28 AM

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பி.எஸ்.கிருஷ்ணன் மறைவு

சென்னை

வன்கொடுமை தடுப்புச் சட்டம், மண்டல் கமிஷன் அறிக்கையை செயல்படுத்தியது ஆகிய பணிகளில் முக்கிய பங்கு வகித்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பி.எஸ்.கிருஷ்ணன் டெல்லியில் காலமானார். அவருக்கு வயது 86.

கேரளாவில் 1932 டிசம்பர் 30-ம் தேதி பிறந்தவர் பி.எஸ்.கிருஷ்ணன். 1956-ல் ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வான அவர், ஆந்திராவிலும், மத்திய அரசிலும் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்தவர். எஸ்.சி. பிரிவினருக்கு சிறப்புக்கூறு திட்டம், எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம், மண்டல் கமிஷன் அறிக்கை அடிப்படையில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது போன்ற செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகித்தவர்.

1990-ல் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும், மத்திய அரசின் கொள்கை உருவாக்க குழுக்களில் பொறுப்பாளராக பணியாற்றினார். தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் உறுப்பினர் செயலர், தேசிய எஸ்.சி., எஸ்.டி. ஆணைய உறுப்பினர், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கவுரவ ஆலோசகர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்துள்ளார். ‘நீதிபதி கிருஷ்ணய்யர் விருது’ உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.

சமீபகாலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு, டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று காலமானார். பி.எஸ்.கிருஷ்ணன் மறைவுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x