

சென்னை
தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடக்கவுள்ள நிலையில், கட்சியில் உறுப்பினர்கள் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்று தொண்டர்களிடம் சமக நிறுவனத் தலைவர் சரத்குமார் அறிவுறுத்தியுள்ளார்.
சமக மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் சரத்குமார் தலைமையில் தியாகராய நகரில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக கூட்ணிக்கு பாராட்டு தெரிவித்தல், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவெடுக்க சமக தலைவர் சரத்குமாருக்கு அதிகாரம் அளித்தல் உட்பட மொத்தம் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் சமக தலைவர் சரத்குமார் பேசுகையில், ‘‘தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடக்கவுள்ள நிலையில், கட்சியில் உறுப்பினர்கள் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும். மேலும், அனைத்து கிளைகளிலும் கட்சி கொடியேற்றுதல், மாவட்டந்தோறும் ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும் உட்பட கட்சியை வலுப்படுத்துவதற்கான அனைத்து பணிகளையும் மேற்கொள்ள வேண்டும்’’ என்றார்.