Published : 11 Nov 2019 09:06 AM
Last Updated : 11 Nov 2019 09:06 AM

‘இந்து தமிழ்’ நாளிதழ், சங்கர் ஐஏஎஸ் அகாடமி இணைந்து நடத்திய வழிகாட்டி நிகழ்ச்சி இந்தியாவை நிரந்தரமாக ஆள்பவர்கள் அதிகாரிகள்தான்: விஐடி பல்கலைக்கழக வேந்தர் கோ.விசுவநாதன் கருத்து  

வேலூர்

இந்தியாவில் அமைச்சர்கள், ஆட்சியாளர்கள் மாறலாம். ஆனால், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள்தான் நிரந்தரமாக ஆள்கிறார்கள். நான் அமைச்சராக இருந்தவன் என்ற முறையில் சொல்கிறேன் என்று விஐடி பல்கலைக்கழக வேந்தர் கோ.விசுவநாதன் தெரிவித்தார்.

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ‘சங்கர் ஐஏஎஸ் அகாடமி’ சார்பில் ‘ஆளப் பிறந்தோம்’ என்ற தலைப்பில் போட்டித் தேர்வுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி வேலூர் விஐடி பல்கலைக் கழக அண்ணா அரங்கில் நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசும்போது, ‘‘நாட்டில் எல்லோரும் ஆள வேண்டும் என்று நினைக்கின்ற நேரத்தில் நிகழ்ச்சிக்கு ‘ஆளப் பிறந்தோம்’ என்ற தலைப்பு கொடுத்துள்ளார்கள். ஒரு காலத்தில் தமிழ் நாட்டில் இருந்து நிறைய ஐஏஎஸ் அதிகாரிகள் மத்திய அரசில் இருந்தார்கள். இப்போது, அந்த எண்ணிக்கை குறைந்திருக்கிறது.

இந்த நாட்டில் அமைச்சர்கள் இருந்தாலும், உண்மையாக நாட்டை ஆள்பவர்கள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள்தான். அந்தக் காலத்தில் இருந்து இந்தக் காலம் வரை நாட்டில் எந்தச் சட்டம் போடப்பட்டாலும் எந்தக் கட்சி ஆட்சியில் இருந் தாலும் தொடர்ந்து ஆட்சியை நடத்துபவர்கள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தான். இவர்கள்தான் நிரந்தரமாக ஆள்கிறார்கள்.

அதனால் தான் ஆளப் பிறந்தோம் என்று கூறுகிறார்கள். நானே 1962-ல் ஐபிஎஸ் தேர்வாகி திரிபுரா மாநிலத் துக்கு நியமிக்கப்பட்டேன். எனது தந்தை வேண்டாம் என்றதால் சட்டம் படித்து அரசியலுக்கு வந்து அண்ணா காலத்திலும் கருணாநிதி காலத்திலும் எம்பி ஆனேன். எம்ஜிஆர் காலத்தில் எம்எல்ஏவாகவும் ஜெயலலிதா காலத்தில் அமைச்சராகவும் இருந்துவிட்டேன். இப்போது நான் அரசியலை விட்டுவிட்டாலும் கொள்கைகளை விடவில்லை. நான் இன்றும் பெரியார், அண்ணா வழிதான்.

எனது 50 ஆண்டுகால அனுப வத்தில் சொல்கிறேன், ஆட்சி மாறினாலும் அதிகாரிகள் நிரந் தரமானவர்கள். அவர்கள் பணியை நான் நேரடியாக பார்த்திருக்கிறேன். ஒரு அமைச்சரும் ஐஏஎஸ் அதிகாரியும் நேர்மையாக இருந்தால், அந்த இலாகாவேயே நேர்மையாக மாற்றிவிட முடியும். ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் நேர்மையாக இருந்து இந்த மக்களை காப்பாற்ற வேண்டும். ஒரு காலத்தில் இருந்தது போல் தமிழக மாணவர்கள் ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வில் அதிகம் தேர்வாக வேண்டும்.

இந்தியாவில் கல்வித் துறையில் வேறுபாடு இருக்கிறது. தற்போது, இந்தி பேசும் 10 மாநிலங்களில் இந்தி, ஆங்கிலம் மட்டுமே படிக்கிறார்கள். மும்மொழி கொள்கை என்பது 1968-ல் நான் எம்பியாக இருந்தபோது சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்தி பேசாத மாநிலங்களில் தாய் மொழியுடன் இந்தியும் ஆங்கிலமும் இருக்க வேண்டும். அதேநேரம், இந்தி பேசும் மாநிலங்களில் இந்தி, ஆங்கிலத்துடன் தென்னிந்திய மொழிகளில் ஏதாவது ஒன்றை முன்னுரிமையாக படிக்க வேண் டும் என்பதுதான் மும்மொழி கொள்கை. அது எங்கும் நிறை வேற்றப்படவில்லை. அதை யாரும் கேட்கவும் இல்லை.

உலக அளவில் ஊழல் நிறைந்த நாடுகள் பட்டியலில் நாம் 78-வது இடத்தில் இருக்கிறோம். இதை மாற்ற வேண்டும். மக்களாட்சியில் பெரும் குறை வந்துவிட்டது. மக்களால் மக்களுக்காக நடத்தப் படுகிற ஆட்சிதான் மக்களாட்சி. அரசியல்வாதிகளிடம் இருந்த ஊழல் இப்போது மக்களிடத்திலும் வந்துவிட்டது. இது அடியோடு மாற வேண்டும். இதற்கு மக்களே மாற வேண்டும். நீங்கள் ஐஏஸ், ஐபிஎஸ் அதிகாரியாக வந்தாலும் எதிர் காலத்தை வழிநடத்தப்போவது நீங்கள்தான். இந்தியாவில் ஊழல் காரணமாக ஆண்டுக்கு ரூ.3.50 லட்சம் கோடி இழப்பு ஏற்படுவதுடன் வளர்ச்சியும் குறை கிறது. இதை எல்லாம் தடுத்து நிறுத்தப்போவது எதிர்காலத்தில் நீங்கள்தான். ஆகவே, நீங்கள்தான் ஆளப் போகிறீர்கள்’’ என்றார்.

நிகழ்ச்சியை இந்து தமிழ் முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேஷ் ஒருங்கிணைத்தார். அடுத்த ஆளப் பிறந்தோம் நிகழ்ச்சி புதுச்சேரி கம்பன் கலையரங்கில் வரும் ஞாயிறு
(நவம்பர் 17) அன்று நடைபெற உள்ளது.

ஐஏஎஸ் தேர்வு குறித்த கேள்விகளுக்கு சார் ஆட்சியர் இளம்பகவத் விளக்கம்

குப்பு: தோல்விகளைக் கண்டு துவளும்போது எப்படி உங்களை தேற்றிக் கொள்வீர்கள்.
இளம்பகவத்: படிக்க வேண் டும் என்பதுதான். எட்டாவது முயற்சியாக ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றேன்.

தோகிலன்: தன்னம்பிக்கையுடன் கவனச் சிதறல் இல்லாமல் எவ்வாறு படிப்பது?
இளம்பகவத்: செல்போன் தவிர்த்து புத்தகங்கள், நாளிதழ்களை படிப்பதால் கவனச் சிதறல் இல்லாமல் படிக்க முடியும்.

நிகழ்ச்சியில் பங்கேற்க முதலாவதாக அரங்குக்கு வந்த நடராஜன், பிரியங்கா ஆகியோருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. மேலும், நடுப்பக்க ஆசிரியர் சமஸ் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த சரண்யா, தானிஷ், யுவ, சபரிநாதன், பவித்ரா ஆகியோருக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன.

ஐஏஎஸ் தேர்வு எழுத மொழி தடையில்லை

ராணிப்பேட்டை சார் ஆட்சியர் இளம்பகவத்:

‘‘தமிழில் ஐஏஎஸ் தேர்வு எழுதுவது என்பது ஒரு வகையில் நமக்கு நன்மைதான். பலர் ஆங்கிலமோ இந்தியோ தெரிந்தால்தான் சாதிக்க முடியும் என நினைக்கின்றனர். ஆனால், பிரெக்ஸிட் விவகாரத்தில் உங்கள் பார்வை எப்படி? இதுதான் முக்கியமே தவிர, அதை எந்த மொழியில் வெளிப்படுத்துகிறீர்கள் என்பது இரண்டாம் பட்சம்தான். மொழியில் ஆர்வம் காட்டுவதைவிட விஷயங்களில் நமக்கு தெளிவு வேண்டும். இதற்கு, பத்திரிகைகள் வாசிப்புதான் முக்கியம். நான் ஐஏஎஸ் தேர்வுக்கு படிக்கும்போது இந்து ஆங்கில பத்திரிகையை இரண்டரை கி.மீ. தூரம் சென்று வாங்கி வருவேன். தமிழில் ஐஏஎஸ் தேர்வு எழுதுவதை அவமானமாகக் கருதக்கூடாது. தாய் மொழியில் படிப்பதும் தேர்வு எழுதுவதும் ஒவ்வொரு மாணவரின் உரிமை’’ என்றார்.

பத்திரிகை வாசிப்பு குடிநபரின் அன்றாட கடமை

நடுப்பக்க ஆசிரியர் சமஸ்:

‘‘எனக்கு முந்தைய தலைமுறை, எனக்கு கொடுத்துச் சென்ற வாய்ப்புகளை அதிகாரங்களை நான் அடுத்த தலைமுறைக்கு கொடுக்கிறேனா? என்ற கேள்விக்கு பதில் தேடுவது நம் வாழ்க்கையின் மைய நோக்கம். எனக்கு கிடைக்கும் வசதிகள் வாய்ப்புகள் என் பக்கத்தில் இருப்பவர்களுக்கும் கிடைக்கிறதா? என்ற கேள்வியை நாம் எழுப்பிக் கொள்ள வேண்டும். ஒரு பத்திரிகையை படிக்கும்போது அதன் செய்திகள் வழியே இந்த கேள்விக்குத்தான் நாம் முதலில் பதில் தேடுகிறோம் என்று நினைக்கிறேன். பத்திரிகை வாசிப்பு ஒரு குடி நபருடைய அன்றாட கடமைகளில் ஒன்றாகிறது. அதிலும், ஆளும் கனவோடு இருப்பவர்களுக்கு அது அத்தியாவசியம்’’ என்றார்.

இந்து நாளிதழ் ஐஏஎஸ் பாடத்திட்டத்தின் ஒரு பகுதி

சங்கர் ஐஏஎஸ் அகாடமி ஹெட் சந்துரு:

‘‘ஐஏஎஸ் தேர்வுக்கு தயாராகுபவர்கள் இந்து ஆங்கிலம் நாளிதழ் அவசியம் வாசிக்க வேண்டும். இந்து நாளிதழ்தான் ஐஏஎஸ் தேர்வுக்கு பெரிய பாடத்திட்டம். ஐஏஎஸ் தேர்வுக்கு இந்து தமிழ், ஆங்கில நாளிதழ்கள் முக்கியமானது என சொல்லலாம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x