Published : 11 Nov 2019 08:48 AM
Last Updated : 11 Nov 2019 08:48 AM

பெண்களுக்காக ரூ.8 கோடியில் 150 நவீன இ-கழிவறைகள்: சென்னை மாநகராட்சி நடவடிக்கை

சென்னை

சென்னையில் பெண்களுக்காக ரூ.8 கோடி செலவில் 150 நவீன இ-கழிவறைகளை அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

சென்னை மாநகரப் பகுதியில் 74 லட்சம் பேர் நிரந்தரமாக வசித்து வருகின்றனர். மேலும், சென்னைக்கு தினமும் வந்து செல்வது, சில நாட்கள் தங்கிச் செல்வது என 20 லட்சத்தும் மேற்பட்டோர் உள்ளனர். சென்னையில் பயணம் செய்வோருக்கு ஏற்ற வகையிலும், குடிசைப் பகுதிகளுக்கு அருகில் 853 இடங்களில் 6,701 இருக்கைகளை கொண்ட பொதுக்கழிப்பிடங்களை சென்னை மாநகராட்சி அமைத்துள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் அந்த கழிப்பிடங்கள் தூய்மையாக பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில் மகளிருக்கான கழிப்பறைகளை அதிகப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:வெளியில் செல்லும் பொதுமக்கள் தங்கள் இயற்கை உபாதைகளை கழிக்க போதிய இடவசதியின்றி அவதிப்படுகின்றனர். குறிப்பாக ஆண்களை விட, பெண்கள் அதிக சிரமத்துக்கு ஆளாகின்றனர். அதனால் அவர்களின் சிரமத்தை போக்கும் வகையில் மாநகராட்சியில் அனைத்து மண்டலங்களிலும், பல்வேறு இடங்களில் ரூ.8 கோடி செலவில் மகளிருக்கான 150 நவீன இ-கழிப்பறைகளை கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இந்த கழிவறைகளை ஆன்லைனில் கண்காணிக்க முடியும். நீர் இருப்பு, மின் வசதி போன்ற விவரங்களை கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடியே பெற முடியும். மேலும் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இந்த நவீன இ-கழிவறைகள் அமைக்கப்பட உள்ளன.

பொதுமக்கள் தங்கள் அருகில் உள்ள பொதுக் கழிப்பிடங்களின் இருப்பிடங்களை அறிந்துகொள்ள ஏதுவாக, அனைத்து பொது கழிப்பிடங்களும் கூகுள் வரைபடத்தில் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுள்ளன.

மத்திய அரசு, சென்னை மாநகராட்சி மற்றும் கூகுள் வரைபடம் ஆகியவை இணைந்து இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டனர். கூகுள் வரைபடத்தில் ‘Toilet’ என தட்டச்சு செய்தால், தங்களின் அருகில் உள்ள பொதுக்கழிப்பிடங்களின் விவரங்கள் கிடைக்கும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x