

க.சக்திவேல்
கோவை
ஹோட்டல்களை தேடிச் சென்று உணவருந்திய காலம் மாறி, விரும்பும் ஹோட்டல் உணவுகள் வீடு தேடி வரும் நிலை வந்துவிட்டது. நூற்றுக்கணக்கான ஹோட்டல்கள் இருந்தாலும், சுகாதாரமான ஹோட்டல்களுக்கே வாடிக்கையாளர்கள் முன்னுரிமை அளிக்கின்றனர். இதை மதிப்பிடுவதற்காக வீடு தேடிச் சென்று உணவு விநியோகிக்கும் தனியார் நிறுவனங்கள் ஹோட்டல்களுக்கு ‘ஸ்டார் ரேட்டிங்’ வழங்குகின்றன. இதைப் பார்த்தும் பல வாடிக்கையாளர்கள் ஹோட்டல்களை தேர்வு செய்கின்றனர்.
ஆனால், அவர்கள் எந்த அடிப்படையில் ரேட்டிங் வழங்குகிறார்கள் என்பது குறித்த நம்பகத்தன்மை இல்லாத நிலை இருந்து வந்தது. இதை முறைப்படுத்தவும், வாடிக்கையாளர்களின் நம்பகத் தன்மையை அதிகரிக்கவும், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ), ஹோட்டல்கள் தாங்களாக முன்வந்து ‘ஹைஜீன் ரேட்டிங்’ பெறும் முறையை அறிமுகப்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக மாநில உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
பிரத்யேக இணையதளம்
ஹோட்டல்கள் தங்கள் தரத்தை தாங்களே மேம்படுத்திக் கொள்ளவும், சுகாதாரமான ஹோட்டல்களை வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்க உதவும் நோக்கிலும் ‘ஹைஜீன் ரேட்டிங்’ முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கென www.fssai.gov.in/servesafe என்ற பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பதிவு செய்ய விரும்பும் ஹோட்டல்கள், உணவுப் பாதுகாப்புத் துறையிடம் முறையான உரிமம் பெற்றிருக்க வேண்டும். தங்கள் ஹோட்டல்களில் உணவுப் பாதுகாப்பு கண்காணிப்பாளரை நியமிக்க வேண்டும். உணவு மாதிரிகளை அவ்வப்போது பரிசோதித்திருக்க வேண்டும்.
சுயமதிப்பீடு
பின்னர், தங்கள் ஹோட்டலை சுயமதிப்பீடு செய்து ரேட்டிங்கை இணையதளம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும். இதை சம்பந்தப்பட்ட பகுதியைச் சேர்ந்த உணவு பாதுகாப்பு அலுவலர் களவு ஆய்வு செய்து சரிபார்ப்பார். அதன்பிறகு, மிக நன்று, நன்று, சராசரி, முன்னேற்றம் தேவை, மோசம் என்ற 5-ல் ஏதாவது ஒரு ரேட்டிங் வழங்கப்படும். இந்த சான்றை ஹோட்டல் உரிமையாளர்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்திக் கொள்ளலாம்.
இதில் 4 ரேட்டிங் பெற்றுவிட்டால் அந்த ஹோட்டல், ‘Responsible place to eat’ என்ற வகைக்குள் வந்துவிடும். இவ்வாறு அளிக்கப்படும் ரேட்டிங் சான்று ஓராண்டுக்கு மட்டுமே செல்லுபடியாகும். ‘ஹைஜீன் ரேட்டிங்’ தொடர்பாக ஹோட்டல் உரிமையாளர்களை அழைத்து கூட்டம் நடத்த அனைத்து மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடமும் தெரிவித்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
உரிமையாளரும் வாடிக்கையாளரே
தமிழ்நாடு ஹோட்டல்கள் சங்கத்தின் செயலர் ஆர்.சீனிவாசன் கூறும்போது, “சமூக ஊடகங்கள் வளர்ச்சியடைந்த பிறகு, பொருட்களை ஆன்லைனில் வாங்குவோரும், ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்வோரும் ரேட்டிங்கையும் ஒரு காரணியாக பார்த்து தேர்ந்தெடுக்கின்றனர்.
இதுவரை தனியார் உணவு விநியோக நிறுவனங்கள் எந்த விதிமுறையும் இல்லாமல் ரேட்டிங் அளித்து வந்தன. தற்போது உணவுப் பாதுகாப்புத் துறையே நேரடியாக ரேட்டிங் வழங்குவதால் நம்பகத்தன்மை அதிகரிக்கும். அதை நாங்கள் வெளிப்படையாக வாடிக்கையாளருக்கு தெரிவிக்கலாம். சில இடங்களில் இந்த ரேட்டிங்கை பெறத் தொடங்கிவிட்டனர். எனவே, உணவுப் பாதுகாப்புத் துறையின் இந்த முயற்சியை வரவேற்கிறோம்” என்றார்.