Published : 11 Nov 2019 07:38 AM
Last Updated : 11 Nov 2019 07:38 AM

மாநகராட்சியின் நடவடிக்கைகளால் கடந்த 2 மாதங்களில் சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்தது: சராசரியாக 2 மீட்டர் வரை உயர்ந்துள்ளது

ச.கார்த்திகேயன்

சென்னை

குடிநீர் வாரியத்துடன் இணைந்து மாநகராட்சி மேற்கொண்ட நடவடிக்கைகளால், கடந்த 2 மாதங்களில் சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் சராசரியாக 2.23 மீட்டர் உயர்ந்துள்ளது.

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளாக பருவமழை பொய்த்ததால், குடிநீர் ஆதாரங்களாக விளங்கும் 4 ஏரிகளும் வறண்டன. 90 சதவீத ஆழ்துளை கிணறுகளும் வறண்டன. பெரும்பாலான இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் கடந்த ஆண்டு குடிநீர் தட்டுப்பாடு உச்சத்தை எட்டியது. ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலமாக குடிநீர் கொண்டு வரப்பட்டு, சென்னை மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டது.

இந்நிலையில், மாநிலம் முழுவதும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்துவது, விழிப்புணர்வு ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்துமாறு தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதைத்தொடர்ந்து சென்னையில், மாநகராட்சி மற்றும் சென்னை குடிநீர் வாரியம் ஆகியவை இணைந்து, அனைத்து வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்தவும், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டன. அதன் பலனாக, கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் கிடைத்த மழை காரணமாக சென்னையில் 2.23 மீட்டர் (சுமார் ஏழரை அடி) அளவுக்கு நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

சென்னை மாநகராட்சி சார்பில், இந்த ஆண்டு மாநகரப் பகுதியில் உள்ள மழைநீர் கட்டமைப்புகளை ஆய்வு செய்யவும் கட்டமைப்பு இல்லாத கட்டிடங்களில் புதிய கட்டமைப்புகளை ஏற்படுத்தவும் மாநகராட்சி வார்டு பொறியாளர், வரி வசூலிப்பவர், சுகாதார ஆய்வாளர், குடிநீர் வாரிய பொறியாளர், குடிநீர் பணிமனை மேலாளர் ஆகிய 5 பேரைக் கொண்டு, மாநகராட்சி மண்டல அலுவலர் தலைமையிலும் குடிநீர் வாரிய வட்டார பொறியாளர் தலைமையிலும் வார்டு வாரியாக 200 குழுக்கள் அமைக்கப்பட்டன.

இக்குழுக்கள் மூலம் இதுவரை 3 லட்சம் வீடுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் 2 லட்சத்து 17 ஆயிரம் வீடுகளில் ஏற்கெனவே மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. 34 ஆயிரம் வீடுகளில் மறுசீரமைக்க வேண்டிய நிலையில் கட்டமைப்புகள் இருந்தன. 50 ஆயிரம் வீடுகளில் கட்டமைப்புகள் இல்லை. இக்குழுவின் அறிவுறுத்தலால், 27 ஆயிரம் வீடுகளில் புதிதாக கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பயன்பாடற்று கிடந்த 320 பொது கிணறுகள் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளாக மாற்றப்பட்டுள்ளன.

மழைநீர் வடிகால்களின் அருகில் 12 ஆயிரம் இடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 300 இடங்களில் 15 அடி ஆழம் கொண்ட மழைநீர் சேகரிப்பு உறைகிணறுகள், சாலையோரங்கள் மற்றும் மழைநீர் வடிகால்களில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 17 கோயில் குளங்கள், 100-க்கும் மேற்பட்ட நீர்நிலைகளை புனரமைக்கும் பணிகளும் முடிக்கப்பட்டுள்ளன. இப்பணிகள் காரணமாக கடந்த இரு மாதங்களில் கிடைத்த மழையால், நிலத்தடி நீர் மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, கடந்த செப்டம்பர் மாதத்தில் சராசரியாக 0.95 மீட்டர், அக்டோபரில் 1.28 மீட்டர் என மொத்தம் 2.23 மீட்டர் வரை நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இவ்வாறு மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.

சென்னை குடிநீர் வாரிய நிலநீர், புவியியல் ஆய்வாளர் பி.சுப்பிரமணியன் கூறும்போது, “குடிநீர் வாரியத்தின் 140 திறந்தவெளி கிணறுகளில் இருந்து எடுக்கப்பட்ட அளவுகளின்படி, நீர்மட்ட உயர்வு விவரம் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் குடிநீர் வாரியத்தின் 270 பயன்பாடற்ற கிணறுகள், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளாக மாற்றப்பட்டுள்ளன. அடுத்து வரும் வாரங்களில் அதிக மழை கிடைக்க வாய்ப்புள்ளது. அப்போது, சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் மேலும் உயரும்” என்றார்.

பாதிப்பு ஏற்படாது

அதிக மழை பெய்து, நிலம் முழுவதும் நீரால் நிரம்பிய நிலையில், மழைநீர் கட்டமைப்பில் செலுத்தப்படும் நீரை உறிஞ்சும் தன்மையை கட்டமைப்பு இழக்கும்போது என்ன நேரிடும் என அவரிடம் கேட்டபோது, “அப்படி ஒரு நிலை வரும்போது, நீர் வெளியேறி சாலைகளுக்கு வந்து, வடிகால்கள் வழியாக கடலுக்கு சென்றுவிடும். மழைநீர் கட்டமைப்புகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x