

சென்னை
முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரும், தேர்தல் ஆணைய வரலாற்றில் சிறப்பாகச் செயல்பட்டவருமான மகசேசே விருது பெற்ற டி.என்.சேஷன் ஞாயிற்றுக்கிழமை இரவு காலமானார். அவருக்கு வயது 87.
தமிழக கேடர் ஐஏஎஸ் அதிகாரியும், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையருமான டி.என்.சேஷன் (87) உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். திருநெல்லை நாராயண ஐயர் சேஷன் சுருக்கமாக டி.என்.சேஷன் என அனைவராலும் அழைக்கப்பட்டவர். 10-வது இந்திய தலைமை தேர்தல் ஆணையராக 1991-ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி முதல் 1996-ம் ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி வரை பதவி வகித்தார்.
1932-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 15-ம் தேதி (அப்போதைய நெல்லை மாவட்டம்) கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம், திருநெல்லையில் பிறந்தவர் டி.என்.சேஷன். இயற்பியல் பட்டதாரியான சேஷன், சென்னை கிறித்தவக் கல்லூரியில் விரிவுரையாளராக 3 ஆண்டுகள் பணியாற்றினார்.
பின்னர் சிவில் தேர்வு எழுதினார். ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று 1955-ம் ஆண்டு பேட்ச் தமிழக ஐஏஎஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். பின்னர் 1968-ம் ஆண்டு ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகப் பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
தமிழகத்தில் ஆட்சிப் பணியில் பல்வேறு பொறுப்புகளை வகித்த சேஷன் 1989-ம் ஆண்டு 18-வது கேபினட் செகரட்டரியாகப் பணியாற்றினார். தன்னுடைய பணியின்போது அமைச்சர்களிடம், அதிகாரிகளிடம், மீடியாக்களிடம் சேஷன் பேசிய வெட்டு ஒன்று துண்டு ஒன்று பாணியிலான பேச்சு அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்தது.
அரசு விதிகளை அமல்படுத்துவதில் எதைப் பற்றியும் கவலைப்படாத அவர், பணியில் ஒழுக்கத்தை கடுமையாக எதிர்பார்த்தார். தலைமை தேர்தல் ஆணையராக சேஷன் நியமிக்கப்பட்ட பின்னர்தான் தேர்தல் ஆணையத்துக்கு இருந்த அதிகாரம் குறித்து அனைவருக்கும் தெரிய ஆரம்பித்தது. சாதாரண மக்களுக்கும் தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை வரும்வகையில் சேஷன் பணியாற்றினார்.
முக்கியமாக இந்தியா போன்ற 100 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட தேசத்தில் தேர்தலை மிக நேர்மையாகவும், கறாராகவும், கட்டுப்பாடாகவும் நடத்திக் காட்டினார். தேர்தல் ஆணையத்தின் சக்திமிக்க கரத்தின் அதிகாரத்தைக் கண்டு அரசியல்வாதிகள் அஞ்சும் அளவுக்கு நேர்மையாக தேர்தலை நடத்தினார்.
தேர்தல் நடத்தை விதிகளைக் கடுமையாக்கினார். வாக்காளர் அடையாள அட்டையை அறிமுகப்படுத்தினார். வேட்பாளர்களை கட்டுப்படுத்துவது, தேர்தல் செலவைக் குறைப்பது உள்ளிட்ட முக்கியப் பணிகளை ஆற்றினார். தேர்தல் ஆணையத்தை தனித்துவமாக இயங்க வைத்தார்.
வாக்குக்குப் பணம், பிரச்சாரத்தில் மது விநியோகம், அரசு எந்திரத்தை தேர்தல் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்துவது, மத, சாதி ரீதியாக வாக்காளர்களைப் பிரிப்பது, வழிபாட்டுத் தலங்களைப் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்துவது, கண்டபடி பொதுமக்களுக்கு இடையூறாக ஒலிபெருக்கி மூலம் பிரச்சாரம், அனுமதியின்றி பிரச்சாரம், இரவு 10 மணி தாண்டி பிரச்சாரம் என அனைத்தையும் கட்டுப்படுத்தியதன் மூலம் அனைவரின் மதிப்பைப் பெற்றார்.
1996-ம் ஆண்டு தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். 1996-ம் ஆண்டு அவருக்கு சிறப்பான அரசுப் பணிக்காக ஆசியாவின் நோபல் பரிசு என அழைக்கப்படும் மகசேசே விருது வழங்கப்பட்டது.
1997-ம் ஆண்டு கே.ஆர்.நாராயணனை எதிர்த்து குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார். ஓய்வுக்குப் பின் சென்னையில் மனைவியுடன் வசித்து வந்தார். அவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி உண்டு. குழந்தை இல்லை. கடந்த ஆண்டு அவரது மனைவி காலமானார். இந்நிலையில் நேற்றிரவு (10/11/19) சென்னை செயின்மேரிஸ் சாலையில் உள்ள இல்லத்தில் காலமானார்.
தேர்தல் ஆணைய வரலாற்றில் பல கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்து, விதிகளை அமல்படுத்தி, சேஷன் என்றால் கண்டிப்பு என பெயர் வாங்கிய அவர் என்றென்றும் மக்கள் மனதில் நிற்பார்.